கர்நாடகா, பிஹாரில் கடும் வெள்ளம்: காவிரியில் தமிழகத்துக்கு விநாடிக்கு 47 ஆயிரம் கன அடி நீர் திறப்பு
கர்நாடகா, பிஹார் மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் தலக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், காவிரியின் குறுக்கே உள்ள கிருஷ்ண ராஜசாகர், ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைக்கு நீர்வரத்து பன்மடங்கு அதிகரித்துள்ளது.
கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை பெய்து வருவதால், கபிலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மைசூரு மாவட்டம் பீச்சனஹள்ளியில் உள்ள கபினி அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி உயரமுள்ள கபினி அணையின் நீர்மட்டம் 2,282.78 அடியாக உயர்ந்துள்ளது.
அணை முழுக் கொள்ளளவை நெருங்கியுள்ள நிலையில், நீர்வரத்து விநாடிக்கு 37 ஆயிரத்து 462 கன அடியாக உள்ளது. இதன் காரணமாக, அணையின் 4 மதகுகள் வழியே விநாடிக்கு 43 ஆயிரத்து 933 கன அடி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.
மண்டியாவில் 124.80 அடி உயரம் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணைக்கு விநாடிக்கு 37 ஆயிரத்து 68 கன அடி நீர் வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 112.90 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 3,938 கனஅடி நீர்வெளியேற்றப்படுகிறது. கபினி,கிருஷ்ண ராஜ சாகர் அணைகளில் இருந்து மொத்தமாக தமிழகத்துக்கு விநாடிக்கு 47 ஆயிரத்து 871 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிஹாரில்...
பிஹார் மாநிலத்திலும் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன. இதனால்அம்மாநிலத்தின் 16 மாவட்டங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 66.6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசித்த 12,202 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை,வெள்ளம் தொடர்பான விபத்தில் சிக்கி இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகளைச் சேர்ந்த 33 குழுக்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் நிதிஷ்குமார் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தார்.
