உலகின் உயரமான செனாப் ரயில் பாலத்தை அடுத்த ஆண்டில் கட்டி முடிக்க இலக்கு

காஷ்மீரின் பக்கால், காரி பகுதிகளுக்கு இடையே செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டு வரும் உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தின் மாதிரி.
காஷ்மீரின் பக்கால், காரி பகுதிகளுக்கு இடையே செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டு வரும் உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தின் மாதிரி.
Updated on
1 min read

உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தின் கட்டுமானப் பணியை அடுத்த ஆண்டுக்குள் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரின் பக்கால், காரி பகுதிகளுக்கு இடையே செனாப் நதியின் குறுக்கே உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் கட்ட கடந்த 2002-ம்ஆண்டில் முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் பாலத்தின் உறுதித் தன்மையில் கேள்வி எழுந்ததால் கடந்த 2009-ல் பணிகள் நிறுத்தப்பட்டன. இதன்பின் கடந்த 2010-ல் மீண்டும் பாலத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்படைந்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, "1.3 கி.மீ. நீளம் கொண்ட இந்த பாலத்தின் உயரம் 359 மீட்டராகும். இதுதான் உலகத்தின் மிக உயரமான ரயில்வே பாலம் ஆகும். கடந்த ஓராண்டாக பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டுக்குள் பணிகளை நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் 2022 டிசம்பரில் காஷ்மீரின் ரயில் போக்குவரத்து முழுமை பெறும்" என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in