

திருவனந்தபுர கடற்கரை கிராமங்களில் இன்று நள்ளிரவு முதல் 10 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் இன்று 593 பேருக்குக் கரோனா ஏற்பட்டுள்ளதாகவும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் சனிக்கிழமை திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
''கேரளாவில் இன்று 593 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 11,659 பேர் நோய் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் 364 பேருக்கு நோய் பரவியுள்ளது.
இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 116 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 90 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்துள்ளனர். 19 சுகாதாரத் துறை ஊழியர்களுக்கும், ஒரு ராணுவ வீரருக்கும், ஒரு தீயணைப்புப் படை வீரருக்கும் நோய் பரவியுள்ளது. இன்று கரோனா பாதித்து 2 பேர் மரணமடைந்தனர். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 70 வயதான அருள்தாஸ் என்பவரும், 60 வயதான பாபுராஜ் என்பவரும் மரணமடைந்தனர். 204 பேர் நோயிலிருந்து குணம் அடைந்துள்ளனர்.
இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 173 பேர் திருவனந்தபுரம் மாவட்டத்தையும், 53 பேர் கொல்லம் மாவட்டத்தையும், 49 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், 44 பேர் எர்ணாகுளம் மாவட்டத்தையும், 42 பேர் ஆலப்புழா மாவட்டத்தையும், 39 பேர் கண்ணூர் மாவட்டத்தையும், 29 பேர் காசர்கோடு மாவட்டத்தையும், தலா 28 பேர் பத்தனம்திட்டா மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களையும், தலா 26 பேர் வயநாடு மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களையும், 21 பேர் திருச்சூர் மாவட்டத்தையும், 19 பேர் மலப்புரம் மாவட்டத்தையும், 16 பேர் கோட்டயம் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். கடந்த 24 மணி நேரத்தில் 18,967 பேருக்குப் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
கேரளாவில் பல்வேறு பகுதிகளில் 1,73,932 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 6,841 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர். இன்று கரோனா அறிகுறிகளுடன் 1,053 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது கரோனா பாதித்து 6,416 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 5,14,140 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 7,016 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வர உள்ளன. சுகாதாரத்துறை ஊழியர்கள், வெளிமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கமுள்ள 92,312 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 87,653 பேருக்கு நோய் இல்லை எனத் தெரியவந்துள்ளது.
கேரளாவில் தற்போது 299 நோய்த் தீவிரம் உள்ள பகுதிகளாக இருக்கின்றன. கேரளா தற்போது நோய்ப் பரவலின் மூன்றாவது கட்டத்தில் இரண்டாவது பகுதியில் உள்ளது. ஊரடங்கு சட்டத்திற்கு முன்பு மற்ற மாநிலங்களில் நோய்ப் பரவல் குறைவாக இருந்தது. கேரளாவில் மே 4-ம் தேதி 499 நோயாளிகள் மட்டுமே இருந்தனர். அப்போது 3 பேர் மட்டுமே மரணம் அடைந்திருந்தனர். பொதுமக்கள் அனைவரும் நோய்த் தடுப்பு நடவடிக்கையைத் தீவிரமாகக் கடைப்பிடித்ததால்தான் இந்த நிலை இருந்தது. ஆனால், தற்போது கேரளாவில் நோயாளிகள் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. ஆனால், மரண எண்ணிக்கை எதிர்பார்த்த அளவு கூடவில்லை.
கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் நோய் பரவுவது 60 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது. எங்கிருந்து, எப்படி நோய் பரவியது எனத் தெரியாதவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் நோய் பரவும் பகுதிகள் அதிகரித்துள்ளன.
திருவனந்தபுரம் மாவட்டத்தில் இரண்டு பகுதிகளில் நோய் சமூகப் பரவல் தொடங்கிவிட்டது. எனவே, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை நாம் மேலும் தீவிரப்படுத்தியே ஆகவேண்டும். மலப்புரம் மாவட்டம், பொன்னானி பகுதியில் நடந்த தீவிர நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக நல்ல பலன் ஏற்பட்டுள்ளது.
தீவிர நோய் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு மாற்றப்படுவார்கள். நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் நோய் அறிகுறி இல்லாத நோயாளிகளை வீட்டில் வைத்தே சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மக்கள் அரசுடன் ஒத்துழைத்தால் மட்டுமே நோயின் தீவிரத்தைக் குறைக்க முடியும். கடந்த 6 மாதத்திற்கு மேலாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் நாம் ஈடுபட்டு வருகின்றோம். இதன் காரணமாக பலருக்குக் களைப்பும், வெறுப்பும் ஏற்படத் தொடங்கிவிட்டது. எனவே நாம் மிகவும் கவனமாக இருந்தால் மட்டுமே நோய்ப் பரவலைத் தடுக்க முடியும். கொள்ளை நோயான இதை நாம் எப்படியும் கட்டுப்படுத்தி விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்கு முன்பு பலமுறை நாம் இதை நிரூபித்துள்ளோம்.
திருவனந்தபுரம் மாவட்டத்தில் கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் நோய் பரவுவது அதிகரித்துள்ளது. இன்று நோய் பாதித்த 173 பேரில் 152 பேருக்கு நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் நோய் பரவியுள்ளது. இதில் 4 பேருக்கு எப்படி, எங்கிருந்து நோய் பரவியது என்று தெரியவில்லை. சமூகப் பரவல் ஏற்பட்டுள்ள புல்லுவிளை மற்றும் பூந்துறைப் பகுதிகளில் காவல் துறை, சுகாதாரத் துறை, வருவாய்த் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பினர் மிகத் தீவிரமாக நோய்த் தடுப்பு நடவடிக்கையில் 24 மணி நேரமும் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவனந்தபுரம் நகரில் பேட்டை, அட்டக்குளங்கரை உள்பட சில இடங்களில் நோய்ப் பரவல் அதிகமாக உள்ளது. திருவனந்தபுரம் கடற்கரை கிராமங்களில் இன்று நள்ளிரவு முதல் 10 நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மலப்புரம் மாவட்டம், மஞ்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கேரளாவின் முதல் பிளாஸ்மா வங்கி திறக்கப்பட்டுள்ளது. அனைத்து காவல் நிலையங்களிலும் ஒரு ஆக்சிஜன் சிலிண்டர் வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய நேரங்களில் போலீஸாரும் பொதுமக்களும் இதைப் பயன்படுத்தலாம்''.
இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.