

தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கியிருக்கும் ஸ்வப்னா சுரேஷுக்கு எதிராகப் புகார்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசைகட்டுகின்றன. இதனால் கேரளத்தை ஆளும் மார்க்சிஸ்ட் அரசு, இடியாப்பச் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறது.
முதல்வர் பினராயி விஜயனின் பொறுப்பில் இருக்கும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றியவர் ஸ்வப்னா என்பதால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு முதல்வரும் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் எனக் காங்கிரஸும் பாஜகவும் கச்சைகட்டுகின்றன. காங்கிரஸ் இன்னும் ஒருபடிமேலே போய், பினராயி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவோம் என மிரட்டிக் கொண்டிருக்கிறது.
இதனால் காம்ரேடுகள் கலங்கி நிற்கும் நிலையில், தங்கக் கடத்தல் வழக்கு குறித்தும் அதில் பினராயி விஜயனுக்குத் தொடர்பு இருப்பதாகத் தாங்கள் சொல்வதில் இருக்கும் நியாயம் குறித்தும் விரிவாகப் பேசினார் கேரள மாநிலக் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான ஏ.கே.மணி.
இது குறித்து இந்து தமிழ் திசை இணையத்துக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டி...
முன்பு மார்க்சிஸ்ட் கட்சியானது முதல்வர் உம்மன் சாண்டிக்கு எதிராக சரிதா நாயர் வழக்கைப் பிரயோகம் செய்ததால்தான் இப்போது நீங்கள் ஸ்வப்னா வழக்கில் பினராயிக்குத் தொடர்பு என முடிச்சுப் போடுவதாகத் தோழர்கள் சொல்கிறார்களே?
சரிதா நாயர் வழக்கு என்பது வேறு; ஸ்வப்னா வழக்கு வேறு. ஸ்வப்னா விவகாரத்தில் முக்கிய மந்திரியின் அலுவலகத்தில் இருப்பவர்கள் தங்கக் கடத்தலுக்குத் துணையாக இருந்திருக்கிறார்கள். ஸ்வப்னாவை வைத்து அவர்கள் திருட்டுக்குச் சமானமான காரியத்தைச் செய்திருக்கிறார்கள். முதல்வர் அலுவலகத்தில் இருப்பவர்கள், எந்தத் தகுதியும் இல்லாத ஸ்வப்னாவுக்கு அரசு உத்தியோகம் கொடுத்து அதன் மூலம் கடத்தல் வேலைகளைச் செய்திருக்கிறார்கள். கடத்தல் வேலையைச் செய்வதற்காகவே அந்தப் பெண்மணிக்கு இந்த வேலையைக் கொடுத்ததாக நாங்கள் பார்க்கிறோம். மற்றபடி, சரிதா நாயர் வழக்கிற்குப் பதிலடி கொடுப்பதற்காக நாங்கள் இந்த விவகாரத்தைக் கையில் எடுக்கவில்லை.
இந்த விவகாரத்தில் பெரிய சட்டமான ஊழல்கள் மறைந்து கிடக்கின்றன. மத்திய அரசு விசாரணையைக் கையில் எடுத்திருப்பதால் இதில் புதைந்து கிடக்கக்கூடிய ரகசியங்கள் வெளியே வரப் போகின்றன. முதல்வரின் அலுவலகத்தை மையப்படுத்தி இத்தனை பெரிய கடத்தல் மோசடிகள் நடந்திருப்பதைக் கேரள மக்கள் ரசிக்கவில்லை. ஆகவே, இனிமேலும் முதல்வர் பதவியில் தொடரவேண்டுமா என்பதை அவர்களே ஆலோசனை செய்து முடிவெடுத்தால் நல்லது. ஆனால், பினராயி விஜயன் இனியும் முதல்வர் பதவியில் தொடரக்கூடாது என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு.
‘கேரளத்தில் தங்கத்தின் நிறம் சிவப்பு’ எனக் கிண்டல் செய்திருக்கும் பாஜகவும் பினராயி விஜயன் பதவி விலகி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என கோஷம் எழுப்புகிறதே?
பிஜேபியின் அபிப்பிராயத்தைத் தொட நாங்கள் விரும்பவில்லை. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தமட்டில், ஊழலுக்கு ஆதரவாக ஒரு காலத்திலும் கூட்டு நின்றது கிடையாது. சரிதா கே நாயர் விவகாரத்தில் வேண்டுமென்றே அன்றைய எங்களது முதல்வர் உம்மன் சாண்டிக்கு எதிராக அவதூறு பரப்பினார்கள். “நாளை சத்தியம் வெளியில் வரும்; இறைவன் அதைக் காட்டுவார்” என்று அப்போதே உம்மன் சாண்டி சொன்னார். சத்தியம் இப்போது வெளியே வந்து கொண்டிருக்கிறது.
பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற முறையில், சத்தியங்கள் தெரிவிக்கப்பட வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்தத் தவறை எங்களால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. ஆகவேதான் முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும் என்கிறோம். பிஜேபிக்கு முன்னதாகவே நாங்கள் இதைச் சொல்லிவிட்டோம்.
ஸ்வப்னா சுரேஷுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு என்றெல்லாம் செய்திகள் வருகின்றனவே?
நூற்றுக்கு நூறு சதவீதம் அதற்கு வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால், தீவிரவாதத் தொடர்புகள் இருப்பவர்களால்தான் தங்கக் கடத்தல் போன்ற சர்வதேசக் குற்றங்களில் தைரியமாக ஈடுபடமுடியும். போலீஸ் விசாரணைக்கு உட்படும்போது அதை எதிர்கொள்ளும் சரீர பலமும் (உடல் வலிமை), மன வலிமையும் ஒன்றுபோல இருந்தால்தான் சமாளிக்க முடியும். இவை இரண்டுமே ஸ்வப்னாவிடம் இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுவதற்குத் தேவையான அடிப்படைக் கல்வித் தகுதிகூட இல்லாத ஸ்வப்னாவை அங்கே பணியமர்த்திய சக்தி எதுவாக இருக்கும் என நினைக்கின்றீர்கள்?
அதிகார மட்டத்தில் அவருக்கு இருக்கும் அதீதத் தொடர்புகள்தான் அந்த அபார சக்தி. அதுவுமில்லாமல் தகவல் தொழில்நுட்பப் பணிகளைக் கவனிக்கத்தானே படிப்பு வேண்டும்? திருட்டும் கடத்தலும் செய்வதற்குப் படிப்பு அவசியமில்லையே. அதனால்தான் அந்த இடத்தில் இந்தம்மாவை உட்கார வைத்திருக்கிறார்கள்.
முதல்வரின் முதன்மைச் செயலாளராக இருந்த சிவசங்கரனுக்கும் ஸ்வப்னாவுக்கும்தான் அறிமுகம். இதில் முதல்வர் பினராயி விஜயனுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை என்கிறார்களே?
எப்படி முதல்வருக்குத் தொடர்பில்லாமல் இருக்க முடியும்? முதல்வரின் முதன்மைச் செயலாளராக இருப்பவர் முதல்வரின் அந்தரங்கம் முதற்கொண்டு அனைத்தும் அறிந்தவராக இருக்க வேண்டும். அதேபோல், தனக்கு முதன்மைச் செயலாளராக வருபவர் யார், அவருடைய பின்னணி என்ன என்பதை எல்லாம் முதல்வர் நன்கு அறிந்திருக்க வேண்டும். அப்படி அறிந்த பிறகே அந்த நபரை தனக்குச் செயலாளராக அமர்த்த வேண்டும். அப்படி இருக்கையில், தனது அலுவலகத்தைச் சுற்றி இத்தனை தவறுகள் நடந்த பிறகு, எனக்கு அதுபற்றி எதுவும் தெரியாது என முதல்வர் சொல்வதை ஏற்க முடியாது.
ஸ்வப்னா சுரேஷின் ஃப்ளாட்டுக்கு சிவசங்கரன் அடிக்கடி சென்று வந்திருக்கிறார். இவர் எதற்காக அடிக்கடி அங்கு செல்கிறார் என்ற விவரத்தை உளவுத்துறையினர் முதல்வருக்குத் தெரிவித்திருப்பார்கள். அப்படித் தெரிவித்த பிறகும் தவறுகள் தொடர்ந்தன என்றால் உளவுத்துறையின் தகவலையும் முதல்வர் உதாசீனம் செய்தார் என்றுதான் அர்த்தம் ஆகிறது. என்னுடைய செயலாளர் யார், அவரது நடவடிக்கைகள் என்ன என்பது பற்றியெல்லாம் நான் அறியாமல் இருந்தேன் என்றால் நான் அந்தப் பதவியில் இருக்க அருகதை அற்றவன். அதைத்தான் நாங்கள் பினராயி விஜயனுக்குச் சொல்கிறோம்.
கரோனாவைக் கட்டுப்படுத்திய விதத்தில் கேரள அரசுக்கு உலக அரங்கில் நல்ல பெயர் கிடைத்துவிட்டது. அந்தப் பெயரையும் புகழையும் சரிக்கவே கடத்தல் வழக்கில் காங்கிரஸ் கச்சைகட்டுவதாக செஞ்சட்டைக்காரர்கள் முகம் சிவக்கிறார்களே?
நிச்சயமாக இதில் உண்மை இல்லை. கரோனா கேரளத்தில் பரவத் தொடங்கிய சமயத்தில் கேரளத்து ஜனங்கள் அத்தனை பேரும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தோம். முதல்வர் ஒரு வார்த்தை சொன்னால் அதை அப்படியே கேட்டு நடக்க வேண்டும் என்பதில்லை. ஆனால், மற்ற மாநிலங்களைப் போல் கேரளம் இல்லை. ஜனங்கள் அனைவரும் சுய ஒழுக்கத்துடன் ஒன்றுபட்டு நின்றோம். அப்படித்தான் கரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்தோம்.
அதனால்தான் முதல்வருக்கும் பெயர் கிடைத்தது. மற்றபடி இதில் முதல்வரின் தனிப்பட்ட திறமை எதுவும் இல்லை. மக்கள் அரசின் நிபந்தனைகளை ஏற்றுக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்ததால்தான் இது சாத்தியமானது. இது கேரள மக்களுக்கு நன்றாகவே தெரியும் என்பதால் இதை வைத்து யாரும் அரசியல் செய்யமுடியாது.
இவ்வாறு ஏ.கே.மணி தெரிவித்தார்.