

இட்டோலிஜுமாப் என்ற மருந்தினை கோவிட் நோயாளிகளுக்கு அவசரகால தேவைக்கு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் பயன்படுத்துவதற்கு இந்திய ரசாயன மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரல் அலுவலகம் (டி.சி.ஜி.ஐ.) அங்கீகாரம் அளித்துள்ளது
தோலில் நீண்டகாலமாக இருக்கும் தீவிர சொரியாசிஸ் படல நோய்க்கு ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்டுள்ள இட்டோலிஜுமாப் (rDNA அடிப்படையிலானது) என்ற மோனோகுளோனல் நோய் எதிர்ப்புக் கிருமியை, மருத்துவ ஆய்வகப் பரிசோதனைத் தகவல்களின் அடிப்படையில், கோவிட் -19 நோயாளிகளுக்கு கட்டுப்படுத்தப்பட்ட அவசரகாலத் தேவைக்குப் பயன்படுத்துவதற்கு இந்திய ரசாயன மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரல் அலுவலகம் (டி.சி.ஜி.ஐ.) அங்கீகாரம் அளித்துள்ளது
மிதமானது முதல் தீவிர அளவிலான நீண்டகால தோல் சொரியாசிஸ் படல நோய்க்கான சிகிச்சைக்கு 2013ஆம் ஆண்டில் இருந்து இந்த மருந்தை அல்ஜுமாப் என்ற வர்த்தகப் பெயரில் பயோகான் நிறுவனம் உற்பத்தி செய்து, விற்பனை செய்து வருகிறது. உள்நாட்டில் தயாரிக்கப்படும் இந்த மருந்து கோவிட்-19 நோய்க்கும் இப்போது மறுபயன்பாட்டு அடிப்படையில் பயன்படுத்தப்படுகிறது.
கோவிட்-19 நோயாளிகளிடம் இந்த மருந்தை பரிசோதனை செய்ய ஆய்வகப் பரிசோதனையின் இரண்டாம் கட்ட முடிவுகளை பயோகான் நிறுவனம் டி.சி.ஜி.ஐ.-க்கு சமர்ப்பித்துள்ளது. டி.சி.ஜி.ஐ. அலுவலகத்தின் நிபுணர் குழு இந்த ஆய்வகப் பரிசோதனைகள் பற்றி ஆய்வு செய்தது.
மரணம் ஏற்படுவதைத் தடுக்கும் வாய்ப்பு, நுரையீரல் செயல்பாடுகளில் இதன் தாக்கம் ஆகியவை பற்றி பரிசீலனை செய்யப்பட்டது. கோவிட்-19 நோயாளிகளிடம் அழற்சி அதிகரிப்பைத் தடுப்பதற்கான மூலக்கூறுகள் இதில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
விரிவான ஆய்வு மற்றும் கமிட்டியின் பரிந்துரைகளைக் கொண்டு, கட்டுப்படுத்தப்பட்ட அவசர காலப் பயன்பாட்டுக்கு இந்த மருந்தை விற்பனை செய்ய அனுமதி அளிக்க டி.சி.ஜி.ஐ. முடிவு செய்துள்ளது. கோவிட்-19 பாதிப்பால் மிதமானது முதல் தீவிர மூச்சுக் கோளாறு ஏற்படுபவர்களுக்கு, நோயாளியின் ஒப்புதலைப் பெற்று, ஆபத்துக் கால மேலாண்மைத் திட்ட ஏற்பாடு செய்து,
மருத்துவமனையில் மட்டும் பயன்படுத்துவது போன்ற கட்டுப்பாடுகளுடன் இதைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் குறிப்பிட்டுள்ள ``பரிசோதனைக் கட்டத்திலான சிகிச்சை முறைகளின்'' ஒரு பகுதியாக உள்ள ரசாயன மருந்துகளுடன் ஒப்பிட்டால் இட்டோலிஜுமாப் என்ற இந்த உள்நாட்டு மருந்தின் சராசரி விலை குறைவானதாகவே இருக்கும்.