

சமூகப் பரவல் என்ற அபாயக் கட்டத்தை கேரளா நெருங்குவதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் இன்று (வியாழக்கிழமை) நிருபர்களிடம் கூறியதாவது:
''இன்று 339 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 149 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். கேரளாவில் கடந்த சில தினங்களாக நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருகிறது. மேலும், கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருப்பதின் மூலம் நோய் பரவுவதும் அதிகரித்து வருகிறது.
இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 117 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 74 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள் ஆவர். கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் 133 பேருக்கு நோய் பரவி உள்ளது. இவர்களில் 7 பேருக்கு எப்படி நோய் பரவியது என்று தெரியவில்லை. இன்று தலா ஒரு ராணுவ வீரர் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரருக்கும், 6 சுகாதாரத் துறை ஊழியர்களுக்கும் நோய் பரவியுள்ளது.
இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 95 பேர் திருவனந்தபுரம் மாவட்டத்தையும், 55 பேர் மலப்புரம் மாவட்டத்தையும், 50 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், 27 பேர் திருச்சூர் மாவட்டத்தையும், 22 பேர் ஆலப்புழா மாவட்டத்தையும், 20 பேர் இடுக்கி மாவட்டத்தையும், 12 பேர் எர்ணாகுளம் மாவட்டத்தையும், 11 பேர் காசர்கோடு மாவட்டத்தையும், 10 பேர் கொல்லம் மாவட்டத்தையும், தலா 8 பேர் கோழிக்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களையும், தலா 7 பேர் கோட்டயம், வயநாடு மற்றும் பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
இன்று நோய் குணமடைந்தவர்களில் 29 பேர் திருச்சூர் மாவட்டத்தையும், 17 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், 16 பேர் கண்ணூர் மாவட்டத்தையும், 15 பேர் எர்ணாகுளம் மாவட்டத்தையும், 13 பேர் காசர்கோடு மாவட்டத்தையும், 10 பேர் கொல்லம் மாவட்டத்தையும், 9 பேர் திருவனந்தபுரம் மாவட்டத்தையும், தலா 8 பேர் கோட்டயம் மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களையும், தலா 7 பேர் பத்தனம்திட்டா மற்றும் ஆலப்புழா ஆகிய மாவட்டங்களையும், 6 பேர் மலப்புரம் மாவட்டத்தையும், 3 பேர் வயநாடு மாவட்டத்தையும், ஒருவர் கோழிக்கோடு மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
கேரளாவில் இப்போது நகரப் பகுதிகளில்தான் அதிவிரைவாக நோய் பரவுகிறது. இந்தியாவில் மற்ற மாநிலங்களிலும் இதே நிலைதான் ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் பூந்துறை பகுதியில் மிக வேகமாக நோய் பரவி வருகிறது. கேரளாவில் இந்தப் பகுதியில்தான் அதிவிரைவாக நோய் பரவி வருகிறது. உலக சுகாதாரத் துறையின் புதிய அறிக்கையின்படி கரோனா நோய் பரவும் வேகம் மிகப் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
எனவே பொது இடங்களில் ஆட்கள் கூட்டம் கூடுவதை எந்தக் காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது. கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 12,592 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதுவரை 6,534 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கேரளாவின் பல்வேறு பகுதிகளில் 2,795 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது 1,85,960 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 3,261 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர். இன்று நோய் அறிகுறிகளுடன் 471 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 2,20,677 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 4,854 பரிசோதனை முடிவுகள் இன்னும் வர உள்ளன. சுகாதாரத்துறை ஊழியர்கள், வெளிமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கமுள்ள 66,934 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 63,199 பேருக்கு நோய் இல்லை எனத் தெரியவந்துள்ளது.
கேரளாவில் பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 3,07,219 பேருக்கு பல்வேறு வகையான பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. தற்போது கேரளாவில் 151 நோய்த் தீவிரம் உள்ள பகுதிகள் உள்ளன. நாம் தற்போது நோய்ப் பரவலில் மிக முக்கியமான கட்டத்தை அடைந்துள்ளோம். சமூகப் பரவல் என்ற அபாய கட்டத்தை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.
எனவே இதுதான் நாம் மிக மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலகட்டம் ஆகும். திருவனந்தபுரத்தில் நடந்த ஒரு விஷயத்தை நாம் முக்கிய கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இங்கு ஒரு மீன் சந்தையில் ஒருவருக்கு நோய் ஏற்பட்டது. அந்த நபர் மூலம் ஏராளமானோருக்கு நோய் பரவியது. இதன் காரணமாகத்தான் திருவனந்தபுரம் நகரத்தில் மும்மடங்கு ஊரடங்கு சட்டத்தை அமலுக்குக் கொண்டு வர வேண்டிய நிலை ஏற்பட்டது.
திருவனந்தபுரத்தில் மட்டும்தான் இந்த நிலை எனக் கருதி யாரும் கவனக் குறைவாக இருந்துவிட வேண்டாம். கேரளாவில் மேலும் பல பகுதிகளில் இதேபோன்று நோய் வேகமாகப் பரவும் வாய்ப்புகள் அதிக அளவில் காணப்படுகின்றன. எனவே எப்போது வேண்டுமானாலும், ஊரடங்கு சட்ட நிபந்தனைகளை மிகவும் கடுமையாக்க வேண்டிய நிலை ஏற்படும். நமக்கு நோய் வராது என்று யாரும் எண்ண வேண்டாம். தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் சமூகத்தின் நன்மைக்காகவே கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த நிபந்தனைகளை அனைவரும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் சமூகப் பரவல் என்ற ஆபத்தை விலை கொடுத்து வாங்க வேண்டி வரும்.
திருவனந்தபுரம், பூந்துறை பகுதியில் நோய் பரவுவதைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கு மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கமாண்டோ வீரர்கள் உட்பட 500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தமிழகத்தை ஒட்டியுள்ள கடற்கரை கிராமம் என்பதால் இங்கிருந்து தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டில் இருந்து இங்கும் ஏராளமான மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர்.
தற்போதைய சூழ்நிலையில் திருவனந்தபுரத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டில் இருந்து திருவனந்தபுரத்திற்கும் மீன்பிடிக்கச் செல்ல, தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தமிழக போலீஸாரும் நல்ல ஒத்துழைப்பு கொடுக்கின்றனர். மிகக் குறைந்த நாட்களில்தான் பூந்துறை பகுதியில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இங்கு ஒரே வீட்டில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றன. எனவே, தேவைப்பட்டால் இவர்களை தனித்தனி இடங்களில் தங்கவைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கேரளாவில் தற்போது நோய்ப் பரவலில் நாம் மூன்றாவது கட்டத்தை அடைந்துள்ளோம். முதல் இரண்டு கட்டங்களில் நாம் நோய்ப் பரவலை பெருமளவு கட்டுப்படுத்தினோம். ஆனால் தற்போது மூன்றாவது கட்டத்தில் நோய் பரவுவது மிக வேகமாக உள்ளது. இது தொடர்பாக ஏற்கெனவே நிபுணர்கள் நம்மை எச்சரித்திருந்தனர். மூன்றாவது கட்டத்தில் நோயின் வேகம் மிக அதிகமாக இருக்கும் என்பதால் அதிக கவனம் தேவை என்று அவர்கள் கூறியிருந்தனர். அதன்படிதான் இப்போது கேரளாவில் நோய்ப் பரவல் வேகமாகி வருகிறது. கடந்த இரு தினங்களாக நோயாளிகளின் எண்ணிக்கை 300-ஐத் தாண்டியுள்ளது. வரும் நாட்களில் நோயாளிகள் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.
முதல் இரண்டு கட்டங்களில் நோயின் தீவிரம் குறைவாக இருந்தபோது இந்த அளவுக்கு நோய் அதிகரிக்கும் என அப்போது யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. எனவே நாம் மிக கவனமாக இருந்தால் மட்டுமே நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த முடியும். திருவனந்தபுரத்தில் கடந்த 3 நாட்களில் மட்டும் 213 பேருக்கு நோய் பரவி உள்ளது. இதில் 196 பேருக்குக் கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் நோய் பரவியது. இன்று நோய் உறுதி செய்யப்பட்ட 95 பேரில் 87 பேருக்கும் கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் நோய் பரவியுள்ளது''.
இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.