

சுதந்திரத்துக்கு முன்பாக நம் நாடு பாதுகாப்புத் துறையில் உலகின் பல நாடுகளைக் காட்டிலும் முன்னேறியதாக இருந்தது என்று மனதின் குரல் என்ற வானொலி உரையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்றைய வானொலி உரையில் பேசிய பகுதி வருமாறு:
நண்பர்களே, சுதந்திரத்திற்கு முன்பாக, நமது நாட்டின் பாதுகாப்புத் துறை, உலகின் பல நாடுகளைக் காட்டிலும் முன்னேறி இருந்தது. நம்மிடத்தில் பல ஆயுத தளவாடங்கள் தயாரிக்கும் ஆலைகள் இருந்தன. அப்போது பல நாடுகள் நம்மை விட அதிகம் பின்தங்கி இருந்தன, இன்றோ அவை நம்மை விட முன்னேறி விட்டன. சுதந்திரத்திற்குப் பின்னர், பாதுகாப்புத் துறையில் நாம் மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள், நமது கடந்தகால அனுபவங்களிலிருந்து நாம் பெற்றிருக்க வேண்டிய பாடம் ஆகியவற்றை நாம் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால், இன்று பாதுகாப்புத் துறையில், தொழில்நுட்பத் துறையில், பாரதம் முன்னேற்றம் காணத் தொடர் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது, பாரதம் தற்சார்பு நிலை நோக்கி முன்னேறி வருகிறது.
நண்பர்களே, எந்த ஒரு இயக்கமும் மக்களின் பங்களிப்பு இல்லாது போனால் அது நிறைவேறாது, வெற்றி பெறாது; ஆகையால் தற்சார்பு பாரதம் என்ற திசையில், ஒரு குடிமகன் என்ற முறையில், நம்மனைவருடைய உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு உணர்வு, ஒத்துழைப்பு ஆகியன மிகவும் அவசியமானவை, இன்றியமையாதவை. நீங்கள் உள்ளூர்ப் பொருட்களை வாங்கினால், அவற்றுக்காகக் குரல் கொடுத்தால், நீங்களும் இந்த தேசம் வலுவடைய உங்கள் பங்களிப்பை ஆற்றுகிறீர்கள் என்பது உறுதி. ஒருவகையில் நீங்களும் நாட்டுப்பணியில் ஈடுபடுகிறீர்கள் என்பது பொருள். நீங்கள் எந்தத் தொழில் வேண்டுமானாலும் புரியலாம், அனைத்து இடங்களிலும் நாட்டுப்பணியாற்ற ஏராளமான வாய்ப்புகள் கண்டிப்பாக இருக்கின்றன. நாட்டின் தேவைகளைப் புரிந்து கொண்டு நீங்கள் எந்தச் செயலைப் புரிந்தாலும், அது நாட்டுக்கு நீங்கள் செய்யும் சேவையாகும். உங்களுடைய இந்தச் சேவை தேசத்தை ஏதோ ஒருவகையில் பலமுடையதாக்கவே செய்யும். மேலும் நாம் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும் – நமது நாடு எந்த அளவுக்கு பலமுடையதாக ஆகிறதோ, அந்த அளவுக்கு உலகிலே அமைதிக்கான சாத்தியக்கூறுகளும் அதிகரிக்கும்.
இவ்வாறு இது குறித்து பிரதமர் கூறினார்.