கரோனா வைரஸ் சிகிச்சைக்கான ‘கோவிஃபர்’ மருந்து விற்பனையைத் தொடங்கியது ஹெட்ரோ நிறுவனம்: விலை என்ன தெரியுமா? முக்கிய மாநிலங்களுக்கு முன்னுரிமை

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

கரோனா வைரஸ் தொற்று நோயாளிகளின் உயிர் காக்கும் மருந்தாகக் கருதப்படும் 'கோவிஃபர்' மருந்து விற்பனையை ஹெட்ரோ நிறுவனம் இன்று தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக 20 ஆயிரம் மருந்துகள் விற்கப்பட உள்ளன.

இதில் 10 ஆயிரம் மருந்துகள் டெல்லி, ஹைதராபாத், தமிழகம், மும்பை உள்ளிட்ட கரோனாவில் அதிகமாகப் பாதிக்கப்பட்ட நகரங்களுக்கு அனுப்பப்படுகிறது. ஊசி மூலம் மனிதனின் ஐ.வி.(நரம்பு) வழியாகச் செலுத்தப்படும் 100 எம்ஜி அளவு கொண்ட ஒரு மருந்தின் விலை ரூ.5,400 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸாஸ் பாதிக்கப்பட்டோருக்கு ஆயுர்வேத மருந்துகளும், வழக்கமான பொது மருத்துவ மருந்துகளும் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் து கரோனாவுக்கென பிரத்யேக மருந்து ஒன்றை ஹெட்ரோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

‘கோவிஃபர்’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மருந்து அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனமான கிலீட் நிறுவனத்தின் ரெம்டெசிவிர் (Gilead’s Remdesivir) மருந்தின் ஒரு வகையாகும். ரெம்டெசிவிர் மருந்துக்கு ஐரோப்பிய மருந்து ஆணையமும், அமெரிக்க மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையமும் அனுமதி அளித்துள்ளன.

இந்நிலையில் இதன் ஒரு வகை மருந்தை இந்தியாவில் ஹெட்ரோ நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த மருந்தின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் கடந்த 13-ம் தேதி அனுமதி வழங்கியது.

ஹெட்ரோ நிறுவனத்தின் மேலாளர் இயக்குநர் ஸ்ரீனிவாச ரெட்டி நிருபர்களிடம் கூறுகையில், “கரோனா வைரஸ் நோயாளிகளின் உயிர்காக்கும் மருந்தான ரெம்டெசிவிர் மருந்தைப் போல் உருவாக்கப்பட்ட 'கோவிஃபர்' மருந்து அவசர நேரத்தில் மருத்துவர்களின் ஆலோசனைப்படி பயன்படுத்தும் மருந்தாகும்.

முதல் கட்டமாக 20 ஆயிரம் மருந்துகள் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட உள்ளன. முதல் கட்டமாக கரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் மும்பை, டெல்லி, தமிழகம், குஜராத், ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு 10 ஆயிரம் மருந்துகள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.

2-வது 10 ஆயிரம் மருந்துகள் கொல்கத்தா, இந்தூர், போபால், திருவனந்தபுரம், ராஞ்சி, புவனேஷ்வர், லக்னோ, பாட்னா, விஜயவாடா, கொச்சின், கோவா உள்ளிட்ட நகரங்களுக்கு அடுத்த வாரத்தில் அனுப்பி வைக்கப்படும். இந்த அவசரக் காலத்தில் மட்டுமே பயன்படுத்தப்படும் இந்த மருந்து பயன்பாட்டுக்கு வந்துவிட்டால் நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலம் குறையும் என நம்புகிறோம்.

மருத்துவர்களுக்கு இருக்கும் நெருக்கடியும் குறையும். அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையில் மத்திய அரசுகள், மாநில அரசுகள், மருத்துவ நிபுணர்கள் ஆகியோருடன் தொடர்ந்து பேசி வருகிறோம்.

100 மில்லிகிராம் அளவில் வரும் 'கோவிஃபர்' மருந்துகளை மருத்துவர்களின் ஆலோசனையின் மூலம் அவசரநேரத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த மருந்தின் மூலம் நிச்சயம் உயிரிழப்பு குறையும் என நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்.

'கோவிஃபர்' மருந்துகளை கரோனா நோயாளிகளின் கடைசிக் கட்டத்தில் மருத்துவர்கள் ஆலோசனைப்படி பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த மருந்துகளைக் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், நீண்டநோய்கள் உள்ளவர்கள் நுரையீரல் நோய், கல்லீரல் பிரச்சினை உள்ளவர்களுக்குப் பயன்படுத்தக்கூடாது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in