கேரளாவில் புதிதாக 61 பேருக்கு கரோனா தொற்று: சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா தகவல்

கேரளாவில் புதிதாக 61 பேருக்கு கரோனா தொற்று: சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா தகவல்
Updated on
1 min read

கேரளத்தில் புதிதாக 61 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கேரள சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா திருவனந்தபுரத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

''கேரளத்தில் நேற்று 61 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேரும், காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேரும், கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த 7 பேரும், கொல்லம் மற்றும் ஆலப்புழா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலா 6 பேரும், திருவனந்தபுரம் மற்றும் பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலா 4 பேரும், திருச்சூர், மலப்புரம் மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலா 3 பேரும், கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேரும், எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 37 பேர் மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், 20 பேர் குவைத், சவுதி அரேபியா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்தும் வந்தவர்கள் ஆவர்.

கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் 4 பேருக்கு நோய் பரவியுள்ளது. கோவிட்-19 சிகிச்சையில் இருந்த 15 பேர் நேற்று குணமடைந்துள்ளனர். இதையடுத்து இதுவரை குணமானவர்களின் எண்ணிக்கை 590 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 670 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து 1,31,651 பேர் கேரளத்துக்கு வந்துள்ளனர். வெளிநாடுகளிலிருந்து விமானங்கள் மூலம் 19,662 பேரும், கப்பல்கள் மூலம் 1,621 பேரும், வெளி மாநிலங்களிலிருந்து சாலை வழியாக 1,00,572 பேரும், ரயில்கள் மூலம் 9,796 பேரும் வந்துள்ளனர்.

தற்போது கேரளத்தின் பல்வேறு மாவட்டங்களில் 1,34,654 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 1,33,413 பேர் வீடுகளிலும், 1,241 பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர்.

நேற்று கரோனா அறிகுறிகளுடன் 208 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 3,099 பேரின் உமிழ்நீர் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதுவரை 67, 371 பேரின் உமிழ்நீர் மாதிரிகளைப் பரிசோதித்ததில் 64,093 பேருக்கு நோய் இல்லை எனத் தெரியவந்துள்ளது.

மேலும் சுகாதாரத் துறை ஊழியர்கள், வெளிமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கமுள்ள 12,506 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 11,604 பேருக்கு நோய் இல்லை என தெரியவந்துள்ளது. புதிதாக 10 இடங்கள் நோய்த் தீவிரம் உள்ள பகுதிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இதையடுத்து கேரளத்தில் தற்போது நோய்த் தீவிரம் உள்ள பகுதிகளின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது''.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in