கரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை, மும்பை உள்பட 13 நகராட்சி ஆணையர்களுடன் மத்திய அமைச்சரவைச் செயலாளர் ஆலோசனை

மத்திய அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் கவுபா : கோப்புப்படம்
மத்திய அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் கவுபா : கோப்புப்படம்
Updated on
2 min read

கரோனா வைரஸ் தொற்று அதிகமாக இருக்கும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, மும்பை உள்பட 13 நகராட்சி ஆணையர்கள், மாவட்ட ஆட்சியர்களுடன் மத்திய அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் கவுபா இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தக் கொண்டுவரப்பட்ட லாக்டவுன் 4-வது கட்டம் வரும் 31-ம் தேதியுடன் முடிவடைய இருக்கும் நிலையில் இந்த ஆலோசனைக்கூட்டம் நடந்துள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, மும்பை, அகமதாபாத், டெல்லி, தானே, புனே, ஹைதரபாத், கொல்கத்தா, இந்தூர், ஜெய்ப்பூர், ஜோத்பூர் ஆகிய நகராட்சிகளின் ஆணையர்கள், மாவட்ட ஆட்சியர்கள், மாநிலத்தின் தலைமைச் செயலாளர்கள், மாநில சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர்கள் ஆகியோர் காணொலி வாயிலாகப் பங்கேற்றார்கள் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள மொத்த கரோனா நோயாளிகளில் 70 சதவீதம் இந்த 13 நகரங்களில் இருந்துதான் வந்துள்ளது என்பதால், கரோனா பரவலைத் தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை, மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து மத்திய அரசு ஏற்கெனவே பல்வேறு வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இருப்பினும் இந்த 13 நகரங்களில் கரோனா பாதிப்பு அதிகரிப்புக்கான காரணம், எங்கு அதிகமாக பரவல் ஏற்படுகிறது, கரோனா பாதிப்பு வீதம், இறப்பு வீதம், இரட்டிப்பாக எடுக்கும் காலம், லட்சத்தில் எத்தனை பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது போன்ற விவரங்கள் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளன.

மேலும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள், கரோன பரவல் திரட்சிப் பகுதிகள், வீட்டுக்கு வீடு பரிசோதனை செய்யப்படுகிறதா, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைத் தேடுதல், பரிசோதனைகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன.

கரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் இடங்களில் நுரையீரல் நோய் இருப்பவர்களைக் கண்டறிதல், இன்புளூயன்ஸா காய்ச்சல் இருப்பவர்களைக் கண்டறிதல், சமூல விலகல் முறையாகக் கடைபிடிக்கப்படுகிறதா, கைகளைச் சுத்தமாக வைத்திருத்தலுக்கு விழிப்புணர்வு செய்யப்படுகிறதா போன்ற அம்சங்களையும் கூட்டத்தில் விவாதித்துள்ளனர்.

குறிப்பாக மாநகரட்சிகளில் இருக்கும் மக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதிகள், குடிசைப் பகுதிகளில் கரோனா விழிப்புணர்வு எவ்வாறு இருக்கிறது, அங்கு செய்யப்படும் பரிசோதனைகள், அங்கு பாதிப்புகளின் அளவு, இறப்பு வீதம், நாள்தோறும் பரிசோதனை செய்யப்படும் எண்ணிக்கை, வீடுதோறும் ஆய்வு செய்யப்படுகிறதா போன்றவற்றுக்கு விளக்கம் கேட்டு விவாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவி்க்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in