அமைச்சர் ஷைலஜா
அமைச்சர் ஷைலஜா

கேரள முதல்வரின் சொந்த கிராமமும் கரோனா ஹாட் ஸ்பாட் பகுதியானது: சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தகவல்

Published on

கேரள முதல்வரின் சொந்த ஊரான பினராயி கிராமம் உட்பட கேரளத்தில் புதிதாக நான்கு இடங்கள் கரோனா தொற்று அதிகமாகப் பரவும் ஹாட் ஸ்பாட் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்தியாவிலேயே கரோனா தொற்று முதன்முதலில் கண்டறியப்பட்ட கேரள மாநிலத்தில் தொற்றுப் பரவல் தொடர்ந்து கட்டுக்குள் வைக்கப்பட்டிருந்தாலும் நாளுக்கு நாள் அந்தக் கட்டுப்பாடுகள் தகர்ந்து கொண்டே போகின்றன. இதனால் கரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கையில் ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது கேரளா.

இந்த நிலையில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா வெளியிட்ட அறிக்கையில், கேரள முதல்வர் பினராயி விஜயனின் சொந்த ஊரான பினராயி கிராமமும் கரோனா தொற்றுப் பரவல் அதிகம் உள்ள ஹாட் ஸ்பாட் பகுதிக்குள் வந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், அவரது அறிக்கையில் உள்ள விவரங்கள்:

''கேரளாவில் திங்களன்று புதிதாக 49 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 14 பேர் காசர்கோடு மாவட்டத்தையும், 10 பேர் கண்ணூர் மாவட்டத்தையும், தலா 5 பேர் திருவனந்தபுரம், பாலக்காடு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். எஞ்சியவர்களில் 4 பேர் கோழிக்கோடு மாவட்டத்தையும், தலா 3 பேர் பத்தனம்திட்டா, ஆலப்புழா மாவட்டங்களையும், தலா 2 பேர் கொல்லம், கோட்டயம் மாவட்டங்களையும், ஒருவர் இடுக்கி மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள்.

நேற்று தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களில் 18 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 25 பேர் வெளி மாநிலங்களில் (மகாராஷ்டிரா 17, தமிழ்நாடு 4, டெல்லி 2, கர்நாடகா 2) இருந்தும் வந்தவர்கள். கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தததன் மூலம் 6 பேருக்கு நோய்த்தொற்று பரவியுள்ளது. இவர்களில் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 ரிமாண்ட் கைதிகளும், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு சுகாதாரத்துறை ஊழியரும் உள்ளனர்.

12 பேர் கரோனா தொற்று நோயிலிருந்து குணமாகி வீடு திரும்பியிருக்கிறார்கள். இதில் 6 பேர் காசர்கோடு மாவட்டத்தையும், 2 பேர் கொல்லம் மாவட்டத்தையும், தலா ஒருவர் வயநாடு, மலப்புரம், இடுக்கி, மற்றும் எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள். இதையடுத்து இதுவரை கேரளாவில் நோயிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 532 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக நேற்று கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பினராயி, பாலக்காடு மாவட்டத்திலுள்ள புதுசேரி, மலம்புழா மற்றும் சாலிசேரி ஆகிய 4 இடங்கள் நோய்த் தொற்றுப் பரவல் அதிகம் உள்ள ஹாட் ஸ்பாட் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இதையடுத்து தற்போது கேரளாவில் ஹாட் ஸ்பாட் பகுதிகளின் எண்ணிக்கை 55-ல் இருந்து 59 ஆக உயர்ந்துள்ளது''.

இவ்வாறு அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in