

சீனாவில் உருவான கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்த வைரஸால் உலகம் முழுவதும் சுமார் 54 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 3.45 லட்சத்தைத் தாண்டிவிட்டது. இந்தியாவில் கரோனா பாதிப்பு 1.3 லட்சத்தையும் உயிரிழப்பு 4 ஆயிரத்தையும் தாண்டிவிட்டது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் கரோனா பாதிப்பு உள்ளது.
ஆனால் லட்சத்தீவுகள் யூனியன் பிரதேசத்தில் மட்டும் இதுவரை கரோனா வைரஸுக்கு ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை. கேரளா கடற்கரை அருகே அமைந்துள்ள 36 தீவுகளின் கூட்டம்தான் லட்சத்தீவுகள். அங்கு 64 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இதுபோல நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள நாகாலாந்து மாநிலத்திலும் இதுவரை ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை. இந்நிலையில், அம்மாநிலத்தில் நேற்று 3 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மூவரும் சிறப்பு ரயில் மூலம் சென்னையிலிருந்து அங்கு சென்றவர்கள் ஆவர்.
சிக்கிம் மாநிலத்தில் முதல் முறையாக கடந்த 23-ம் தேதி 25 வயது மாணவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர் டெல்லியிலிருந்து திரும்பியவர் ஆவார்.