

கேரளத்தில் கரோனா தொற்றுப் பரவல் அதிகம் உள்ள ஹாட் ஸ்பாட் பகுதிகளாக இதுவரை 37 இடங்கள் அடையாளம் காணப்பட்டிருந்தன. அந்த எண்ணிக்கை 55 ஆக உயர்ந்திருக்கிறது.
இது தொடர்பாக கேரள சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா திருவனந்தபுரத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது:
''கேரளாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 53 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலா 12 பேருக்கும், மலப்புரம் மற்றும் காசர்கோடு் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலா 5 பேருக்கும், ஆலப்புழா, எர்ணாகுளம் மற்றும் பாலக்காடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலா 4 பேருக்கும், கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேருக்கும், பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேருக்கும், கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 18 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 29 பேர் வெளி மாநிலங்களிலிருந்தும் வந்தவர்கள். கரோனா தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் 5 பேருக்கு நோய் பரவி உள்ளது. இதில் ஒருவர் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த சுகாதாரத் துறை ஊழியர் ஆவார். கரோனாவால் பாதிக்கப்பட்டு கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த 53 வயதான பெண் நேற்று சிகிசை பலனின்றி இறந்தார். ஏற்கெனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர், கடந்த 20-ம் தேதி துபாயில் இருந்து கேரளா வந்தவர்.
கரோனா சிகிச்சையில் இருந்தவர்களில் 5 பேர் நோயிலிருந்து நேற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 322 பேர் கேரளத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 520 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இவர்களையும் சேர்த்து கேரளாவில் இதுவரை கரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 847 ஆகும்.
கரோனா தொற்று பரவல் அதிகம் உள்ள இடங்களாக மேலும் 18 இடங்கள் ஹாட் ஸ்பாட் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இதையடுத்து தற்போது கேரளத்தின் ஹாட் ஸ்பாட் பகுதிகளின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது''.
இவ்வாறு அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.