

ஒடிசாவில் உம்பன் புயல் தன் கோரத்தாண்டவங்களை நிகழ்த்தி ஆங்காங்கே மரங்களை வீழ்த்தி சாலை நெடுக விழச் செய்ததால் கேந்திரபாரா மாவட்டத்தில் பிரசவ வலியினால் துடித்த ஒரு பெண்ணுக்கு ஆம்புலன்ஸ்கள் உதவி இல்லாத நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் உதவியது நெகிழ்ச்சி மிகு சம்பவமாகப் பார்க்கப்படுகிறது.
இன்று காலை 9 மணியளவில் ஒடிசாவில் மகாகலபதா தீயணைப்பு நிலையத்திற்கு தொலைபேசி அழைப்பு வந்தது, அதில் பெண் ஒருவர் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருப்பதாகவும் சாலை முழுதும் உம்பன் புயலால் மரங்கள் விழுந்து கிடப்பதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை என்றும் உதவி கோரப்பட்டது, ஜானகி சேத்தி என்ற இந்தப் பெண்ணின் குடும்பத்தின் உதவிக்கு ஆம்புலன்ஸ்கள் வரவில்லை, காரணம் கடும் புயல்காற்றே.
இந்நிலையில் தொலைபேசி வந்ததையடுத்து 2 தீயணைப்புக் குழுக்கள் பெண் இருக்கும் இடத்துக்கு விரைந்தனர். சாலையில் போக்குவரத்தை இயலாமல் செய்து விழுந்து கிடந்த மரங்களை தீயணைப்பு வீரர்கள் அகற்றினர்.. ஜானஹரா கிராமத்திலிருந்து பிரசவ வலிப்பெண்ணை தீயணைப்புச் சேவை வண்டியில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல கிளம்பினர்.
ஆனால் மஹாகலாபதாவில் உள்ள சமூக மருத்துவ நல மையத்துக்கு வரும் வழியிலேயே தீயணைப்பு சேவை வேனிலேயே பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார் ஜானகி சேத்தி.
மேல் சிகிச்சைக்காக சமூக மருத்துவ நல மையத்துக்கு தாயையும் சேயையும் பத்திரமாக கொண்டு சென்றனர் தீயணைப்பு வீரர்கள்.
நேரம் காலம் பாராமல் உம்பன் புயல் கோரத் தாண்டவத்திலும் தங்கள் உயிர்களை பொருட்படுத்தாமல் பிரசவவலியால் துடித்த பெண்ணுக்கு உதவிய தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.