

பெண்களுக்கு எதிரான குற்றங்களையும், ஆசிட் வீசுவதையும் பற்றி ஒரு டிக் டாக் பயனர் பெருமையாகப் பேசிய வீடியோ குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
ஃபைஸல் சித்திக் என்பவர் இந்தியாவில் டிக் டாக்கில் மிகப் பிரபலம். இவரை டிக் டாக்கில் 1.34 கோடி பயனர்கள் தொடர்கின்றனர். இவர் சமீபத்தில் ஒரு வீடியோவில், ஒரு பெண்ணின் மீது ஆசிட் அடிப்பது போலவும், அதன் பிறகு அந்தப் பெண்ணின் முகம் எப்படி சிதைந்துள்ளது என்பதையும் காட்டியிருந்தார். இந்த வீடியோ, குறிப்பிட்ட அந்தப் பெண்ணின் ஒப்பனைத் திறமையைக் காட்டவே எடுக்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் இந்த வீடியோவால் சர்ச்சை வெடித்துள்ளது.
இது குறித்துப் பேசியுள்ள தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா, "நான் ஒரு சமூக ஊடகப் பதிவைப் பார்த்தேன். அதில் ஃபைஸல் சித்திக் என்ற நபர் ஒரு வீடியோவைப் பதிவேற்றியுள்ளார். அது பெண்களுக்கு எதிரான ஆசிட் வீச்சை உயர்த்திப் பிடிக்கிறது.
இந்த விஷயத்தின் தீவிரத்தை உணர்ந்து, மகாராஷ்டிர மாநிலத்தின் டிஜிபிக்குக் கடிதம் எழுதியுள்ளேன். மேலும் டிக் டாக் இந்தியா பிரிவின் அனுஜ் பாட்டியா என்பவருக்கும் கடிதம் எழுதி அந்த வீடியோவை உடனடியாக நீக்கி அந்தக் குறிப்பிட்ட நபரை நீக்கக் கோரினேன். இதன் பின் அந்த வீடியோ நீக்கப்பட்டது.
ஆனால், பெண்களுக்கு எதிரான குற்றத்தை பெருமையாகப் பேசும் அதுபோன்ற நபர்களுக்கு எந்த சமூக ஊடகத்திலும் இடம் தரக்கூடாது. பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் குற்றங்கள் குறித்து ஆணையம் (ஏற்கெனவே) தீவிரமாக விசாரித்து வருகிறது. அந்த வீடியோ பெண்களுக்கு எதிரான வன்முறையை விளம்பரப்படுத்துவதோடு ஆணாதிக்க மனநிலையையும் காட்டுகிறது. துரிதமாக நடவடிக்கை எடுத்து அறிக்கை சமர்ப்பிக்கச் சொல்லி ஆணையம் சார்பாகக் கேட்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
ஃபைஸல் சித்திக் தரப்பிலிருந்தும் இந்த வீடியோவுக்காக மன்னிப்பு கேட்கப்பட்டுள்ளது.