

டெல்லியில் உள்ள மனோகர் பாரிக்கர் ராணுவக் கல்வி மற்றும் பகுப்பாய்வு நிறுவனத்தில் கரோனா வைரஸ் தாக்கம் தொடர்பான கருத்தரங்கு நேற்று நடந்தது. இதில் ராணுவ தளபதி எம்.எம். நரவனே காணொலிக் காட்சி மூலம் பேசினார். இதில் அவர் பேசியதாவது:
திபெத்தில் உள்ள புனிதத் தலமான கைலாஷ் மானசரோவர் செல்வதற்காக, உத்தராகண்ட்டில் இருந்து லிபுலேக் பகுதிக்கு செல்லும் இணைப்புச் சாலை கடந்த வாரம் திறந்து வைக்கப்பட்டது. நேபாள எல்லையை ஒட்டிய பகுதியில் கலி ஆற்றின் மேற்குப் பகுதியில் இந்த சாலையை அமைத்துள்ளோம். கலி ஆற்றின் கிழக்கு கரை பகுதிதான் தங்களுக்கு சொந்தமானது என்று நேபாள தூதர் தெரிவித்துள்ளார். பிறகு எதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
ஒரு சிலரின் (சீனா) தூண்டுதலால் இந்தியாவுடன் எல்லைப் பிரச்சினையை நேபாளம் எழுப்பியிருக்கலாம். அதற்கான சாத்தியங்கள் உள்ளன. சமீபத்தில் லடாக்கிலும் சிக்கிமிலும் இந்திய- சீன ராணுவத்தினரிடையே எல்லைப் பகுதியில் லேசான மோதல் ஏற்பட்டது. எனினும், அதற்கும் நேபாளம் எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் தொடர்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.