

சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 24 பெட்டிகளில் 1200 புலம்பெயர் தொழிலாளர்களை அழைத்துச் சென்ற ஷ்ராமிக் சிறப்பு ரயில் இனிமேல், 1,700 பேருடன் முழுக் கொள்ளளவுடன் இயக்கப்பட உள்ளது.
ஆனால், மூன்று படுக்கைகளிலும், இருக்கை முழுவதும் புலம்பெயர் தொழிலாளர்கள் நிரம்பி இருந்தால் கரோனா கட்டுப்படுத்த வலியுறுத்தப்படும் சமூக விலகல் கடைப்பிடிக்கப்படுமா என்பது கேள்விக்குறிதான்.
சமூக விலகலை வலியுறுத்தி 1200 பேருடன் இயக்கப்பட்டு வந்த ஷ்ராமிக் சிறப்பு ரயில் ஏன் திடீரென 1,700 பேருடன் 3 நிறுத்தங்களுடன் இயக்கப்பட உள்ளது?
புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களின் சொந்த மாநிலம் அனுப்ப மாநில அரசுகளின் வேண்டுகோளுக்கு இணங்க சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 500 ரயில்கள் வரை இயக்கப்பட்டு அதில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர். ஆனால், அனைத்து ரயில்களிலும் இணைக்கப்பட்டுள்ள 24 பெட்டிகளிலும் பெட்டி ஒன்றுக்கு 74 பேர் பயணிப்பதற்குப் பதிலாக 54 பேர் மட்டுமே பயணித்தார்கள். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டி குறைவான பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தச் சூழலில் மாநில அரசுகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, புலம்பெயர் தொழிலாளர்கள் சென்று சேரும் கடைசி நிறுத்தம் தவிர்த்து கூடுதலாக 3 நிறுத்தங்கள் வழங்கப்பட உள்ளன. இதனால் படுக்கை வசதியுள்ள பெட்டியில் முழுக் கொள்ளளவுடன் பயணிகள் பயணிக்க உள்ளனர்.
குறைந்த ரயில்களை இயக்க அனுமதித்துள்ள மாநிலங்கள், அந்தந்த ரயில்களில் அதிகமான தொழிலாளர்களைப் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கோரியுள்ளார்.
பிஹார் மாநிலத்துக்கு அதிகபட்சமாக 100 ரயில்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பப்பட்டு வருகின்றனர். ஆனால், மேற்கு வங்கஅரசு இதுவரை 2 ரயில்களுக்கு மட்டுமே அனுமதியளித்துள்ளது. 8 ரயில்களுக்கு அனுமதியளிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இதுகுறித்து ரயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “நாள் ஒன்றுக்கு 300 ரயில்களை இயக்க ரயில்வே துறைக்கு திறன் இருக்கிறது. இதை அதிகப்படுத்த விரும்புகிறோம். அடுத்த சில நாட்களில் அதிகமான தொழிலாளர்களைச் சொந்த மாநிலத்துக்கு அனுப்ப இருக்கிறோம். அதற்கான ஒப்புதலை மாநில அரசுகள் வழங்கிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
சமூக விலகல் பின்பற்றப்பட்டு தொடக்கத்தில் 54 பயணிகள் பயணிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் இப்போது 74 பயணிகள் பயணித்தால் சமூக விலகல் அப்போதும் தொடருமா அல்லது காற்றில் பறக்கவிடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.