

வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவர்களை தனிமைப்படுத்துவதற்காக சிறப்பு ஏற்பாடுகளை கேரள அரசு செய்துள்ளது.
கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் உலகின் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் கடந்த 40 நாட்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால், வேலை மற்றும் கல்வி நிமித்தமாக வெளிநாடுகளுக்கு சென்ற இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் இந்தியாவுக்குள் வரமுடியாமல் பல்வேறு நாடுகளில் சிக்கி இருக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்துவர வந்தேபாரத் மிஷன் தி்ட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. கடல்மார்க்கமாக கப்பற்படைக் கப்பல்கள் சமுத்திர சேது திட்டத்தை செயல்படுத்தி வெளிநாடுகளில் சி்க்கியவர்களை மீட்டு வருகின்றன
கடந்த 7-ம் தேதி முதல் 14-ம் தேதிவரை பல்வேறு கட்டங்களாக வெளிநாடுகளில் இருந்து இந்தியர்கள் வந்தேபாரத் மிஷன் திட்டம் மூலம் இந்தியர்கள் தாயகம் அழைத்துவரப்படுகின்றன. கேரளாவில் இதுவரை 4 விமானங்கள் மூலம் கேரள மக்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர்.
இவ்வாறு நாடு திரும்புவர்கள் எண்ணிக்கை கணிசமாக இருப்பதால் அவர்களால் கரோனா பரவல் ஏற்படாமல் தடுக்கும் வகையில் அவர்களை தனிமைப்படுத்தி வைக்க கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவர்களை தனிமைப்படுத்துவதற்காக சிறப்பு ஏற்பாடுகளை கேரள அரசு செய்துள்ளது.
இதற்காக கல்லூரி, விடுதிகள் உள்ளிட்டவை தனிமைப்படுத்தப்படும் மையங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. சுமார் 5 ஆயிரம் பேர் வரை தனிமைப்படுத்தப்பட ஏதுவாக இடங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. அதுபோலவே வெளி மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு திரும்புபவர்களும் தனிமைப்படுத்தபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருமே 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்படுவார்கள் என கேரள அரசு அறிவித்துள்ளது.