

எல்லையில் 4 லட்சம் மரக் கன்றுகளை வெறும் 30 நிமிடங்களில் நட்டு எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளனர்.
வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் எல்லைகளையொட்டிய கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் சுமார் 4 லட்சம் மரக் கன்றுகளை நடும் பணியில் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் ஈடுபட்டனர். இந்தப் பணி இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கப்பட்டு அரை மணி நேரத்துக்குள் நிறைவடைந்ததாக எல்லை பாதுகாப்புப் படை செய்தித் தொடர்பாளர் டி.எஸ். பாட்டி தெரிவித்தார்.
எல்லை பாதுகாப்புப் படை ஏற்படுத்தப்பட்டு இந்த ஆண்டு பொன்விழா காணுவதை முன்னிட்டும் சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையிலும் இந்த முயற்சியை வீரர்கள் மேற்கொண்டனர்.
முன்னதாக கடந்த 2013ல், 309,000 மரக் கன்றுகளை 30 நிமிடங்களில் நட்டு மேற்கொண்ட சாதனையை எல்லை பாதுகாப்புப் படை வீரர்களே மீண்டும் முறியடித்துள்ளனர்.
புவி வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கையாக "எனது பூமி, எனது கடமை" என்ற விழிப்புணர்வு வாசகத்தோடு மரக்கன்று நடும் நிகழ்ச்சியை எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் அப்போது நடத்தியது குறிப்பிடத்தக்கது.