

கரோனா வைரஸ் தொற்று கொண்டவர்கள் எல்லைக்கு அப்பாலிருந்து ஊடுருவுவதைத் தடுப்பதே எங்கள் முதன்மை பணியாக உள்ளது என்று எல்லைப் பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) மற்றும் இந்தோ-திபெத்திய எல்லைப் படை (ஐடிபிபீ) ஆகியவற்றின் தலைமை இயக்குநர் சுர்ஜீத் சிங் தேஸ்வால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, “பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளுடனான இந்திய எல்லைகள் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன. எல்லையில் கடந்த 5 வாரங்களாக தீவிரவாதிகள் ஊடுருவல், ஆட்கடத்தல், கள்ளநோட்டு மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற பெரிய அளவிலான சட்டவிரோத செயல்பாடுகள் எதுவும் இல்லை. மிகக் குறைந்த சம்பவங்களே நடந்துள்ளன.
தற்போதைய ஊரடங்கு காலத்தில் எல்லையில் தீவிர கண்காணிப்பு மற்றும் பிற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதேவேளையில், எல்லைக்கு அப்பால் இருந்து கரோனா வைரஸ் தொற்று கொண்டவர்களின் ஊடுருவலை தடுப்பதற்கு முன்னுரிமை அளித்து வருகிறோம். அதுவே தற்போது எங்கள் நோக்கமாக உள்ளது” என்றார். காஷ்மீர் பள்ளத்தாக்கில் கரோனா வைரஸை பரப்புவதற்காக அத்தொற்று கொண்ட தீவிரவாதிகளை ஊடுருவச் செய்ய பாகிஸ்தான் முயற்சிப்பதாக ஜம்மு காஷ்மீர் போலீஸ் டிஜிபி தில்பாக் சிங் கடந்த வாரம் கூறினார். இந்தியாவுக்குள் ஊடுருவ 300-க்கும் மேற்பட்ட பாகிஸ்தானிய தீவிரவாதிகள் எல்லை நெடுகிலும் காத்திருப்பதாக புலனாய்வு அமைப்புகள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.