

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் துணை ஆட்சியர், காவல் உதவி ஆணையர் உள்பட 100 பேர் சுயதனிமைக்கு உட்படுத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறையினர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோழிக்கோட்டில் பிச்சைக்காரர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாமுக்கு துணை ஆட்சியர், காவல் உதவி ஆய்வாளர் எனப் பலரும் சென்றுள்ளனர். அங்கு ஒரு பிச்சைக்காரருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட துணை ஆட்சியர் சாம்பசிவ ராவ் நிருபர்களிடம் கூறுகையில், “லாக் டவுன் தொடங்கியதிலிருந்து கோழிக்கோட்டில் உள்ள பிச்சைக்காரர்கள் மீட்பு மையத்தில் ஏராளமானோர் தங்க வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் 650 பிச்சைக்காரர்கள், சாலையில் திரிந்தவர்கள் அனைவரையும் அழைத்து பள்ளி, கல்லூிகளில் தங்கவைத்து மருத்துவ சிகிச்சை, உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இங்குள்ள தமிழகத்தைச் சேர்ந்த பிச்சைக்காரருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த முகாமுக்கு வந்து உதவிகள் வழங்கிய துணை ஆட்சியர், காவல் உதவி ஆய்வாளர், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், அங்குள்ள பிச்சைக்காரர்கள் என 100 பேரை முன்னெச்சரிக்கையாக சுயதனிமைக்கு உட்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் அனைவரையும் ஸ்வாப் டெஸ்ட் எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.
கோழிக்கோடு மாவட்டத்தில் இதுவரை 12 பேர் கரோனாவால் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,193 பேர் கண்காணப்பில் இருக்கின்றனர். 58 பேர் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது