கரோனா பீதி; கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்திலும் தள்ளுபடி
ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் இடைக்கால ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்துள்ளது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2-வது முறையாக ஆட்சியில் இருந்தபோது குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பயணிப்பதற்காக இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.
ரூ.3,600 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக அந்த நிறுவனம் ரூ.450 கோடி லஞ்சம் வழங்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக இத்தாலி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அந்த நிறுவனத்தின் 2 உயர் அதிகாரிகள் குற்றவாளிகள் என நிரூபணமானது.
இதையடுத்து, இந்தியாவிலும் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த விமானப்படை முன்னாள் தலைமை தளபதி எஸ்.பி.தியாகி, அவரது உறவினர் சஞ்சீவ் மற்றும் ஒரு வழக்கறிஞர் ஆகியோரை சிபிஐ கைது செய்தது. அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தம் 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் ரத்து செய்யப்பட்டது.
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் இந்திய தலைவர் பீட்டர் ஹுலெட்டுக்கு இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல், சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிறிஸ்டியன் மைக்கேல் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில் இந்தியாவில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது இந்தியாவிலும் இதன் பாதிப்பு உள்ளது. கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கையாக கைதிகளை பரேல் அல்லது முன் ஜாமீனில் விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. அதன் அடிப்படையில் தனக்கு ஜாமீன் வழங்குமாறு அவர் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து மைக்கேல் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கிறிஸ்டியன் மைக்கேல் நீண்டகாலம் தலைமறைவாக இருந்தவர், முக்கிய வழக்கில் குற்றவாளியாக கருதப்படும் அவரை இந்த சூழ்நிலையில் விடுதலை செய்ய முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
