மருத்துவம், வாகனக் காப்பீட்டைப் புதுப்பிக்கும் தேதி மேலும் நீட்டிப்பு: மத்திய அரசு புதிய அறிவிப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நோக்கில் லாக் டவுன் நீடித்து வருவதால், மக்களின் சிரமங்களைக் கருதி, மருத்துவக் காப்பீடு, வாகனக் காப்பீடு ஆகியவற்றைப் புதுப்பிக்கும் காலக்கெடுவை மே மாதம் 15-ம் தேதி வரை நீட்டித்து மத்திய நிதியமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

இதன்படி மார்ச் 25-ம் தேதி முதல் மே 3-ம் தேதி வரை காப்பீடுகளை புதுப்பிக்க வேண்டிய நிலையில் இருப்பவர்களுக்கு இந்தக் காலக்கெடு நீ்ட்டிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஏப்ரல் 14-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு கொண்டு வந்தது. அந்த ஊரடங்கு தற்போது மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனால், மருத்துவக் காப்பீடு, வாகனக் காப்பீட்டில் தேர்டுபார்ட்டி பாலிசி வைத்திருப்பவோர் காப்பீட்டைப் புதுப்பிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து காப்பீட்டைப் புதுப்பிக்கும் தேதியை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து நிதியமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், “கரோனாவால் உருவான லாக் டவுன் காலத்தில், மருத்துவக் காப்பீடு, மோட்டார் வாகனக் காப்பீட்டில் தேர்டு பார்ட்டி வைத்திருப்போர் அதைப் புதுப்பிக்க முடியாமல் இருப்பதை உணர்கிறோம். இவர்களின் சிரமங்களைக் கருதி காப்பீடு புதுப்பிக்கும் தேதியை, பணம் செலுத்தும் தேதியை மே 15-ம் தேதி வரை அல்லது அதற்குமுன்போ செலுத்துமாறு நீட்டித்துள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல வாழ்நாள் காப்பீடு வைத்திருப்பவர்களுக்கும் காப்பீடு புதுப்பிக்கும் தேதி, ப்ரீமியம் செலுத்தும் தேதியை நீட்டித்து தனியாக அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in