

கரோனா வைரஸ் பாதிப்பு 150-க்கும் மேலான நாடுகளில் பரவியுள்ளது. இதனால் பல நாடுகளில் ஊரடங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் மார்ச்25 முதல் ஊரடங்கு செயல்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 14 வரை என அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு, மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் நாட்டின் தொழில் செயல்பாடுகளில் 70 சதவீதம் முடங்கியது. அத்தியாவசிய தேவைகள் தவிர பெரும்பாலான துறைகள் முடங்கி உள்ளன. குறிப்பாக உற்பத்தி துறைகள், ஏற்றுமதி இறக்குமதி தொழில்கள், விமான சேவை, சுற்றுலாதுறை, சரக்குப் போக்குவரத்து என அனைத்துமே பாதிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக நுகர்வும் பெருமளவு குறைந்துள்ளது.
இதன் விளைவாக இந்தியப் பொருளாதாரத்தில் ரூ.7 லட்சம் கோடி முதல் ரூ.8 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என சென்ட்ரம் ஆராய்ச்சி நிறுவனம் கணக்கிட்டுள்ளது.
ஏற்கெனவே அக்யூட் ரேட்டிங்ஸ் மற்றும் ரிசர்ச் நிறுவனம் ஊரடங்கினால் நாள் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்று கூறியிருந்தது. அதன் அடிப்படையில் கடந்த 21 நாட்களில் ரூ.7.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் மேலும் இழப்பு அதிகரிக்கலாம் எனத் தெரிகிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதமும் வெகுவாகக் குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.