

கரோனா வைரஸைத் தடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்ட 21 நாட்கள் லாக் டவுனால் தொழிற்சாலை, வர்த்தகம், விமானம், ரயில் போக்குவரத்து அனைத்தும் முடக்கப்பட்டு, மக்கள் நடமாட்டத்துக்கும் கட்டுப்பாடுகள் விதி்க்கப்பட்டன.
இந்தப் பொருளாதார முடக்கத்தால் இந்தியப் பொருளாதாரத்துக்கு ஏறக்குறைய 21 நாட்களில் ரூ.7 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் கடந்த மாதம் 25-ம் தேதி பிரதமர் மோடி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தார். இதில் அத்தியாவசியப் பொருட்கள், வேளாண் பொருட்கள், சுரங்கம், நிதிச்சேவைகள், பொதுச்சேவைகள் தவிர 70 சதவீத பொருளாதாரச் செயல்பாடுகள் முடக்கப்பட்டன.
கடந்த மாதம் 25-ம் தேதியிலிருந்து 21 நாட்களாக தொழிற்சாலைகள், பெரு, சிறு நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டன. ஏழைகள், கூலித்தொழிலாளிகள் வேலையின்றி, வருமானமின்றி தவிக்கிறார்கள். இந்த 21 நாட்களும் ஒவ்வொரு நாளும் பல ஆயிரக்கணக்கான கோடி பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது
சென்ட்ரல் இன்ஸ்ட்டியூஷனல் ரிசர்ச் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “இந்தியப் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய அரசு காா்ப்பரேட் நிறுவனங்களுக்களுக்கும், ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கும் சலுகைகளையும், நிதித்தொகுப்பையும் அறிவித்து பொருளாதாரம் மீண்டு எழும் சூழலில் கரோனா பெருந்தொற்று வந்து தாக்கியுள்ளது. இதனால், நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி மிகக்குறைவாக இருக்கும்.
கரோனா வைரஸைத் தடுக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள லாக் டவுனால் இந்தியப் பொருளாதாரத்துக்கு கடந்த 21 நாட்களில் ரூ.7 லட்சம் முதல் ரூ.8 லட்சம் கோடி இழப்பு இழப்பு ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது .
அக்கியூட் ரேட்டிங் அண்ட் ரிசர்ச் நிறுவனம் வெளியி்ட்ட அறிவிப்பில், “இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள லாக் டவுன்தான் உலகிலேயே மிகப்பெரிய லாக் டவுன். இதன் மூலம் இந்திய பொருளாதாரத்துக்கு நாள்தோறும் ரூ.35 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும், 21 நாட்களில் ரூ.7.50 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்.
இந்த கரோனா வைரஸ் உலகப் பொருளாதாரத்தை மட்டும் சீர்குலைக்காமல் இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் முதலில் பாதி முடக்கத்தையும், மார்ச் 25-க்குப் பின் முழுமையான முடக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஒருவேளை லாக் டவுன் நீக்கப்பட்டாலும் பொருளாதாரச் செயல்பாடுகள் வேகமெடுப்பதைப் பொறுத்து மீண்டு எ ழுவோம். இந்த லாக் டவுனால் போக்குவரத்துத் துறை, உணவகங்கள், ரெஸ்டாரன்ட், ரியல் எஸ்டேட், பொழுதுபோக்கு போன்றவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளது.
அனைத்து இந்திய மோட்டார் காங்கிரஸ் (ஏஐஎம்டிசி) பொதுச்செயலாளர் நவீன் குப்தா கூறுகையில், “கடந்த 15 நாட்களில் எங்களுக்கு ரூ.35,100 கோடி இழப்பும், சராசரியாக ஒரு லாரிக்கு நாள்தோறும் ரூ.2,200 இழப்பும் ஏற்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள 90 சதவீத லாரிகள், டிரக்குகள் ஓரம்கட்டப்பட்டுள்ளன, அத்தியாவசிப் பொருட்கள் மட்டுமே கொண்டு செல்லப்படுகின்றன. லாக் டவுன் நீக்கப்பட்டாலும் லாரித் தொழில் இயல்பு நிலைக்குத் திரும்ப 3 மாதங்கள் தேவைப்படும். மக்களின் வாங்கும் சக்தி குறைவால் நுகர்வு குறைந்து பொருட்களுக்கான தேவை பாதிக்கப்படும். சரக்கு போக்குவரத்தும் குறைவாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.
தேசிய ரியல் எஸ்டேட் கவுன்சில் தலைவர் நிரஞ்சன் ஹிராநந்தானி கூறுகையில், “ரியல் எஸ்டேட் துறையில் இழப்பீட்டைக் கணக்கிடவே அச்சமாக இருக்கிறது. எங்களுடைய முதல்கட்ட மதிப்பில் ஒரு லட்சம் கோடிக்கு மேல் இழப்பு இருக்கும்” எனத் தெரிவித்தார்.
அனைத்து இந்திய சில்லறை வர்த்தகக் கூட்டமைப்பு மதிப்பின்படி, “ சிறு, குறு, நடுத்தர, பெரிய வர்த்தகர்கள் என 45 கோடி பேர் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த லாக் டவுனால் கடந்த 21 நாட்களில் 3000 கோடி டாலர் அளவுக்கு இழப்பு இருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சிக் கணிப்பு: