

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 21 நாட்கள் லாக் டவுனால் கடனுக்கான இஎம்ஐ கட்டுவதில் 3 மாதம் விலக்கு அளித்து வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளன. இதைப் பயன்படுத்தி சிலர் ஓடிபி எண், பின் நம்பர் ஆகியவற்றைப் பெற்று மோசடியில் ஈடுபடலாம் என வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் எச்சரித்துள்ளன.
கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்கும் வகையில் சமூக விலகலைக் கடைப்பிடிக்க 21 நாட்கள் லாக் டவுன் திட்டத்தை மத்திய அரசு கடந்த மாதம் 25-ம் தேதி கொண்டு வந்தது. இதனால் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் , கடைகள், சிறு வியாபாரிகள், சிறு குறுந்தொழில்கள் மூடப்பட்டதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.
இதனால் வங்கியில் கடன் பெற்று மாதம் தோறும் தவணை செலுத்துவோர் வருமானம் இன்றி பெரும் துயரத்தைச் சந்திக்க நேரிடும் எனக் கருதி 3 மாதத்துக்கு இஎம்ஐ செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இதன்படி 3 மாதத்துக்குப் பின் இஎம்ஐ செலுத்தத் தொடங்கலாம்.
ஆனால், இதைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களைக் குழப்பும் வகையில் மோசடி நபர்கள் சிலர் தொலைபேசி வாயிலாகப் பேசி அவர்களின் வங்கிக் கணக்கு ஓடிபி எண், ரகசிய எண் ஆகியவற்றைப் பெற்று மோசடியில் ஈடுபடுவதாக வங்கிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த சில நாட்களாக வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் செய்து வருகின்றன.
கடந்த சில நாட்களாக ஆக்சிஸ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலம் விழிப்புணர்வுச் செய்திகளை அனுப்பி வருகின்றன. இஎம்ஐ செலுத்துவது குறித்து வாடிக்கையாளர்களிடம் பேசும் சைபர் கிரிமினல்கள், மோசடியாளர்கள் வங்கிக் கணக்கின் ஓடிபி எண், ரகசிய எண் ஆகியவற்றைக் கேட்டால் சொல்லாதீர்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளன.
வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கு குறித்த அனைத்து விவரங்களையும் ரகசியமாக வைக்க வேண்டும், யாரிடமும் பகிர வேண்டாம். மோசடியாளர்கள் புதுவிதமான வகையில் அணுகலாம் என வங்கிகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
வங்கியிலிருந்து பேசுகிறோம், மாதத் தவணையிலிருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக விவரங்களைக் கூறங்கள், வங்கிக் கணக்கு ஓடிபி, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டின் சிவிவி எண், பாஸ்வர்டு, வங்கிக்கணக்கு ஆகியவற்றைக் கேட்டு மோசடியில் ஈடுபடலாம். ஆதலால் வாடிக்கையாளர்கள் கவனத்துன் இருந்து எந்த விவரங்களையும் தெரிவிக்க வேண்டாம் என எச்சரித்துள்ளனர்
கடந்த 5-ம் தேதி முதல் எஸ்பிஐ வங்கியும் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு ஆங்கிலத்திலும், பிராந்திய மொழியிலும் மோசடி தொடர்பாக எச்சரிக்கை செய்திகளை அனுப்பி வருகிறது. விழிப்புடன் இருங்கள், எச்சரிக்கையாக இருங்கள் என்று வாடிக்கையாளர்களை நினைவூட்டி வருகிறது.