

கரோனா வைரஸை எதிர்கொள்ள மாநிலங்களுக்கு ரூ.11,092 கோடியை வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று ஒப்புதல் வழங்கினார். மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதி மாநிலங்களின் பேரிடர் நிவாரண நிதியில் சேர்க்கப்பட உள்ளது.
கரோனா வைரஸ் காய்ச்சல் பாதிப்பை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு ஒவ்வொரு மாநிலத்தின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.
இந்நிலையில் கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2-ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு தேவையான நிதி ஒதுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
அமைச்சர் அமித் ஷா ஒப்புதல்
இதன்படி கரோனா வைரஸை எதிர்கொள்ள மாநிலங்களுக்கு ரூ.11,092 கோடி வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று ஒப்புதல் வழங்கினார். மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதி மாநிலங்களின் பேரிடர் நிவாரண நிதியில் சேர்க்கப்பட உள்ளது.
இதன்மூலம் அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். தனிமை முகாம்கள் அமைக்கப்படும். மருத்துவமனை, தனிமை முகாம்களில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு தேவையான உணவு, தண்ணீர், உடைகள், மருத்துவ வசதிகள் செய்து தரப்படும். அனைத்து மாநிலங்களிலும் கூடுதல் ஆய்வகங்கள் அமைக்கப்படும். தெர்மல் ஸ்கேனர்கள், வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட கருவிகளும் வாங்கப்பட உள்ளன.