

நாடுமுழுவதும் விவசாயப் பணிகள் சுமூகமாக நடைபெறவும், உணவு தானியங்கள் தங்கு தடையின்றி செல்லவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார்.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று அச்சம் காரணமாக கடைகளுக்கு மருந்து உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக வந்த மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வருகின்றனர். கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டு ஸ்தலங்களும் மூடப்பட்டுள்ளன.
தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் முக்கிய நகரங்களில் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பொருட்களை கொண்டு செல்வதிலும் சிக்கல் நீடித்து வருகிறது.
இந்தநிலையில் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
நாடுமுழுவதும் விவசாயப் பணிகள் சுமூகமாக நடைபெற வேண்டும். மக்களின் அத்தியாவசிய உணவுப்பொருள் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.
இதுமட்டுமின்றி பல மாநிலங்களில் தற்போது அறுவடை காலம் என்பதால் உணவு தானியங்கள் அறுவடை முடிந்து அவை விற்பனை செய்யப்படவும், அரசு கொள்முதல் நிலையங்களுக்கு சென்றடையவும் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
இதுமட்டுமின்றி விவசாய பொருட்கள் தங்கு தடையின்றி செல்லவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா ஊரடங்கு காரணமாக இந்த பணிகள் எதுவும் பாதிக்கப்படக்கூடாது.
இவ்வாறு அஜய் பல்லா தெரிவித்துள்ளார்.