தப்லீக் ஜமாத் மாநாட்டினர் மீது கண்காணிப்பு தீவிரம்; மருத்துவ சோதனைக்கு முன்வராதவர்களுக்கு வலை- 250 வெளிநாட்டவர்களை தனிமைப்படுத்தி கண்காணிப்பு

டெல்லியில் உள்ள நிஜாமுதீன் மசூதியில் அண்மையில் நடந்த தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்த மசூதி வளாகம் முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் சுகாதாரப் பணியாளர்.  படம்: பிடிஐ
டெல்லியில் உள்ள நிஜாமுதீன் மசூதியில் அண்மையில் நடந்த தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்த மசூதி வளாகம் முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் சுகாதாரப் பணியாளர். படம்: பிடிஐ
Updated on
2 min read

டெல்லியில் தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கக் கூடும் என்ற அச்சத்தின் காரணமாக, அவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

டெல்லியில் தப்லீக்-ஏ-ஜமாத் தினர் மார்ச் 8 முதல் 15-ம் தேதி வரை நடத்திய இஸ்திமா மாநாடுகளால் கரோனா வைரஸ் பாதிப்புஅதிமாகியுள்ளது. நிஜாமுதீன் பகுதியின் அவர்கள் தலைமையகமான மர்கஸ், நேற்று அதிகாலை 4 மணியுடன் முழுவதுமாகக் காலி செய்யப்பட்டு விட்டது.

இஸ்திமா முடிந்து ஊரடங்கால் சிக்கிய வெளிநாட்டினர் உள்ளிட்ட 2,361 பேர் டெல்லியின் பல்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கரோனா சந்தேகத்திற்குள்ளான 617 பேர் மட்டும் பல்வேறு மருத்துவமனைகளில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள னர். இவர்களில் பல வெளிநாட்டவர்களும் இடம் பெற்றுள்ளனர். நேற்று முன்தினம் வரை, 24 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி, மேலும் பலரது ரத்தப்பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாக வில்லை. மர்கஸை காலி செய்த விவகாரத்தில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவலின் நேரடிக் கண்காணிப்பும் இருந்தது தெரியவந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு 2.00 மணிக்கு தோவல் நேரடியாக மர்கஸ் வந்து அதன் நிர்வாகிகளிடம் பேசியுள் ளார். இவரது உத்தரவின்பேரில், இஸ்திமா முடித்து டெல்லியின் வேறு சில பகுதிகளின் மசூதிகளில் தங்கியுள்ள 157 வெளிநாட்ட வர்களுக்கும் கரோனா சோதனை நடத்தப்படுகிறது.

இதனிடையே, டெல்லியின் இஸ்திமாவை முடித்த பல வெளிநாட்டவர்கள் பல்வேறு மாநிலங்களில் வழக்கம்போல் ஜமாத் பணிகளுக்கு சென்றிருந்தனர். கடந்த 10 நாட்களாக கண்காணிக்கப்பட்ட 250 வெளிநாட்டவர்களில் 20 பேருக்கு கரோனா தொற்று இருப்பதும் தெரிந்துள்ளது. இதில் கடைசியாக நேற்று ஜார்கண்டில் சிக்கிய மலேசியாவை சேர்ந்த 22 வயது நபருக்கு கரோனா உறுதியாகி உள்ளது. 291 வெளிநாட்டவர்களுக்கு தவறான தகவல் அளித்து விசா பெற்ற சிக்கலினால் கருப்புப் பட்டியலில் சேர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கரோனா பரவல் சற்று அதிகமான பின் இஸ்திமாவிற்கு சென்றவர்கள், தாம் தங்கியிருந்த மசூதிகளில் இருந்து மெள்ள மெள்ள அரசு நிர்வாகம் முன்பாக வரத் தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில், உத்தரப்பிரதேசத்தில் 75, தமிழ்நாடு 60, கர்நாடகா 50, மகராஷ்டிராவில் 30, மத்தியப்பிரதேசம் 20, தெலங்கானா 11 என்ற ரீதியில் பல மாநிலங்களில் வெளிநாட்டவர் தங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கரோனா மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அவர்களில் இந்தோனேசியாவை சேர்ந்தவர்கள் அதிகமாக இடம்பெற்றுள்ளனர்.

எனினும், இஸ்திமா சென்று வந்த இந்தியர்கள் இன்னும் முழு எண்ணிக்கையில் அரசு முன்வந்து பதிவு செய்யவில்லை. இதன் காரணமாக, அவர்கள் டெல்லியில் இருந்து பயணம் செய்த விமானங்கள் மற்றும் ரயில்களில் பயணிகள் பட்டியலில் தேடி அடையாளம் காணும் முயற்சியை மத்திய உள்துறை செய்து வருகிறது.

இவர்களுடன் முன்பதிவு செய்து பயணமான மற்ற பொதுமக்களின் கைப்பேசி எண்களுக்கும் குறுந்தகவல் அனுப்பப்பட்டு வருகிறது. அதில், கரோனா சோதனை செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்படு கிறது.

இந்த சூழலில், தப்லீக் ஜமாத் அமைப்பின் தலைவர் மவுலானா சாத் உள்ளிட்ட 7 பேர் மீது டெல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தகவல் அளிக்காதோர் மீது நடவடிக்கை: உ.பி. முதல்வர் உத்தரவு

டெல்லியில் தப்லீக்-ஏ-ஜமாத் நடத்திய இஸ்திமாவில் கலந்துகொண்டு தகவல் அளிக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் கூறியதாவது:

மனிதநேயத்திற்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கைகளையும் பொறுத்துக் கொள்ள முடியாது. ஜமாத்தினர் செய்த தவறுக்கு பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது. இதில் வெளிநாட்டினராக இருந்தால் அவர்களது பாஸ்போர்ட்டை முடக்கும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அவர் கூறினார்.

இந்நிலையில், இஸ்திமாவிற்கு பின் ஜமாத் கூட்டங்களுக்காக வந்தவர்கள் உ.பி.யில் உள்ள மசூதிகளில் சிக்கியுள்ளனர். மேற்குப் பகுதியில் உள்ள ஷாம்லியின் மசூதிகளில் 28 பேர் ஜமாத்திற்காக தங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த தகவலை மறைத்ததாக ஒரு மவுலானாவிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிழக்குப் பகுதியில் உள்ள கோண்டாவின் மசூதிகளில் ஜமாத் கூட்டத்திற்கு வந்த வெளியாட்கள் சுமார் 50 பேர் சிக்கியுள்ளனர். இவர்களையும் தனிமைப்படுத்தி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, தப்லீக்-ஏ-ஜமாத் செய்தது தலிபான் வகை குற்றம் என மத்திய சிறுபான்மைத்துறை அமைச்சரான முக்தார் அப்பாஸ் நக்வீ கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in