

இந்தியாவில் உள்ள விமானநிலையங்கள், துறைமுகங்கள் வழியாக வெளிநாட்டிலிருந்து வரும் வெளிநாட்டுப் பயணிகள், இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர்களிடம், கரோனா வைரஸ் பரிசோதனை நடத்துவதில் மெத்தனப் போக்கு கடைப்பிடிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்களை பரிசோதிக்காமலேயே விட்டுவிட்டனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆனால் மத்திய அரசு இதை மறுத்துள்ளது. இதுதொடர்பாக மத்திய பத்திரிகை தகவல் மையம் (பிஐபி) நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
இந்தியாவில் ஜனவரி 30-ம்தேதி முதன்முதலாக கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் ஜனவரி 18-ம் தேதி முதலே இந்தியாவில் உள்ள 30 விமான நிலையங்கள், 77 துறைமுகங்கள் வழியாக வரும் பயணிகளுக்கு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய அரசு தீவிரமான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஆங்காங்கே தனிமைப்படுத்தும் மையங்கள், டெல்லியின் 2 இடங்களில் தனி முகாம்கள் அமைக்கப்பட்டு வெளிநாட்டிலிருந்து வந்த பயணிகள் தங்கவைக்கப்பட்டனர். அவர்கள் கண்காணிப்புக்குப் பின்னரே விடுவிக்கப்பட்டனர்.
வெளிநாட்டுப் பயணிகள், இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர்களிடம் சோதனை நடத்துவதில் எந்தவித பாரபட்சமும் காட்டப்படவில்லை. மற்றவர்கள் எப்படிபரிசோதனை செய்யப்பட்டனரோ, அதே ரீதியில் வெளிநாட்டுப் பயணிகள், இந்தியத் தொழிலதிபர்களும் பரிசோதிக்கப்பட்டனர்.
வெளிநாட்டுக்குச் செல்லவிருந்த நபர்களின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டன. அதைப் போலவே மற்ற நாடுகளைக் காட்டிலும் முன்னதாகவே வெளிநாட்டு விமானங்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டன.
இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட, முறையே 25 நாட்கள், 39 நாட்களுக்குப் பின்னரே, பரிசோதனை மையங்கள் விமானநிலையங்களில் அமைக்கப்பட்டன.
ஆனால் இந்தியாவில் கரோனாவைரஸ் பாதிப்பு வருவதற்கு முன்னதாகவே ஜனவரி 18-ம் தேதி முதலே பரிசோதனை நடந்து வருகிறது. மேலும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், மாநில அரசுகளுடன் தொடர்பு கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்களை வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழங்கி வருகிறது.
இவ்வாறு பிஐபி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. - பிடிஐ