

இந்தியாவில் 223 பேர் கரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கரோனா வைரஸ் பரவலில் இந்தியா தற்போதும் 2-ம் கட்டத்தில் இருப்பதால், அதற்குள் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவித்த மத்திய அரசு, திரையரங்குகள், மக்கள் கூடுமிடங்கள், ஷாப்பிங் மால்கள் போன்றவற்றை வரும் 31-ம் தேதிவரை திறக்கத் தடை விதித்தது.
மேலும், வரும் 22-ம் தேதி மக்கள் தாமாக முன்வந்து சுய ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். மார்ச் 22-ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது கரோனா வைரஸைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி கேள்வி எழுப்பினார்.
அதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பதில் கூறும்போது, “கரோனா வைரஸ் நோய்த் தொற்றின் தாக்கம் இன்னும் 2-ம் நிலையில்தான் இருக்கிறது. 3-ம் நிலையான மக்களுக்கு இடையே வேகமாகப் பரவும் நிலைக்கு வரவில்லை.
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் அரசு, சூழலைக் கட்டுப்படுத்தி வருகிறது. தேவையான தகவல்களைப் பெற்று சரியாகப் பயன்படுத்தி வருகிறோம்.
இதுவரை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 223-ஆக உள்ளது. 4 பேர் உயிரிழந்துள்ளனர். 6,700 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று குறித்து பரிசோதனை செய்பவர்களுக்குத் துல்லியமான அறிவியல்பூர்வமான தகவல்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் தொடர்ந்து பரிசோதனைகளைச் செய்து வருகிறது.
உலக சுகாதார அமைப்புடன் தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தொடர்பில் இருந்து வருகிறது. அவர்களின் அறிவுரைப்படி பல்வேறு நேரங்களில் செயல்படுகிறோம். அதுமட்டுமல்லாமல் உலகளவில் பல்வேறு அறிவியல் வல்லுநர்களுடன் தொடர்பில் இருந்து ஆலோசனைகள் பெற்று வருகிறோம். ஆதலால், கவலைப்படும் வகையில் எந்தவிதமான தகவலும் வந்ததாக நான் நினைக்கவில்லை” என்றார் ஹர்ஷவர்தன்.
10 ஆயிரம் பேர்
கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் நேற்று வரை 10,080 பேர் உயிரிழந்தனர்.
ஐரோப்பிய நாடுகளில் 4,932 பேரும், ஆசிய நாடுகளில் 3,431 பேரும், ஈரானில் 1,433 பேரும் உயிரிழந்தனர்.
இதனிடையே வெளிநாடுகளில் தங்கியுள்ள இந்தியர்கள், அதே இடங்களிலேயே இருக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே சவுதி அரேபியாவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து, ரயில், பஸ், டாக்ஸி போக்குவரத்து அடுத்த 14 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. அங்கு 274 பேர் பாதிக்கப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் 453 பேரும், இலங்கையில் 59 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இலங்கையில் இரண்டரை நாட்களுக்கு (மார்ச் 23-ம் தேதி காலை 6 மணி வரை) ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இத்தாலி
இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 427 பேர் உயிரிழந்தனர். இதனால் அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,405-ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் 3,245 பேர் இறந்துள்ளனர். சீனாவில் வைரஸ் காய்ச்சலால் நேற்று யாரும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படவில்லை. - பிடிஐ