

கொடிய கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் அமெரிக்காவில் உள்ள இந்திய மாணவர்களுக்கு தேவையான உதவிகளை அளிக்குமாறு இந்தியத் தூதரகம் அமெரிக்க அரசை வலியுறுத்தியுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் சீனாவைத் தொடர்ந்து இந்தியா உட்பட 160 நாடுகளில் பரவியுள்ளது. இதுவரை வைரஸால் 2.03 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலின் தீவிரத்தால் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் மட்டும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றில் 9,464 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோய்க்கு இதுவரை அங்கு 155 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 205 பேர் பாதிப்பு அடைந்துள்ளதாக அதிகாரபூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் அமெரிக்காவைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட அறிவியல், மருத்துவ மற்றும் தொழில்நுட்பத் துறைகளைச் சேர்ந்த பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் தங்கள் வளாகங்களை மூடிவிட்டு ஆன்லைனில் வகுப்புகளை நடத்தி வருகின்றன.
இதனையடுத்து விடுதிகளைக் காலி செய்து மாணவர்கள் வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இக்கல்வி நிலையங்களில் மொத்தமாக 2 லட்சத்துக்கும் அதிகமான இந்திய மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்தியாவிலும் அமெரிக்காவிலும் கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் விசா நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் வகுப்புகளுக்கு மட்டுமே அமெரிக்காவில் தங்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில், ஹூஸ்டன், அட்லாண்டா, சிகாகோ, நியூயார்க் மற்றும் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள அனைத்து ஐந்து இந்தியத் தூதரகங்களும், இந்திய மாணவர்களுக்குத் தேவையான உதவிகளை சிரமமின்றி கிடைக்கச் செய்ய அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் குடியுரிமைத் துறைகளோடு தொடர்ந்து பேசி வருகின்றன.
இந்திய மாணவர்கள் தங்கள் விசாவிற்கு வரும்போது குடியேற்ற சேவைகள், அவர்கள் நாட்டில் தங்குவதற்கான சட்டபூர்வமான நடவடிக்கைகளில் அவர்களுக்குத் தேவையான உதவி அளித்து சிரமங்களை எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் குடியுரிமைத் துறைகளிடம் இந்தியத் தூதரகங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.
இதுகுறித்து வாஷிங்டன் டி.சி.யில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள ஆலோசனைக் குறிப்பில் "இந்த மாறி வரும் நிலைமைகள் சர்வதேச மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அமெரிக்க அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது" என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவில் இந்தியத் தூதரகம் மற்றும் ஐந்து துணைத் தூதரகங்களும் மாணவர்களுக்கு வழங்கியுள்ள ஆலோசனைக் குறிப்பில், ''இந்திய மாணவர்கள் அனைத்து அத்தியாவசிய உள்நாட்டு அல்லது சர்வதேசப் பயணங்களையும் தவிர்க்க வேண்டும். இது முன்னோடியில்லாத சூழ்நிலை. ஆனால் அமைதியான மனதுடன் முடிவுகளை எடுப்பதன் மூலம் அதை வெற்றிகரமாக நிர்வகிக்க முடியும்.
தயவுசெய்து விவேகமான சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, தகவல் மற்றும் பயண ஆலோசனைகளை கவனமாக மதிப்பாய்வு செய்யுங்கள். மார்ச் 18, 2020 நிலவரப்படி, நீங்கள் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்குப் பயணத்தைத் திட்டமிடுகிறீர்களானால், நீங்கள் வந்தவுடன் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவீர்கள். தேவைப்பட்டால் குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு அரசால் ஒதுக்கப்பட்ட வசதியில் நீங்கள் தனிமைப்படுத்தப்படலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.