

இரா.வினோத்
கர்நாடகாவில் கடந்த டிசம்பரில் நடந்த 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதற்கு பொறுப்பேற்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த தினேஷ் குண்டுராவ், செயல் தலைவர் ஈஸ்வர் காண்ட்ரே உள்ளிட்டோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து, கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக அந்த பதவிகள் காலியாக இருந்தன.
இந்நிலையில், அந்த பதவிக்கு அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நீர்வளத்துறை அமைச்சருமான டி.கேசிவகுமார் நியமிக் கப்பட்டிருக்கிறார். அதேபோல, செயல் தலைவர்களாக ஈஷ்வர் காண்ட்ரே, சதீஷ் ஜார்கிஹோளி, சலீம் அகமது ஆகிய மூவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, டெல்லி காங்கிரஸ் தலைவராக முன்னாள் எம்எல்ஏ அனில் சவுத்ரி நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும், துணைத் தலைவர்களாக அபிஷேக் தக், ஷிவானி சோப்ரா, ஜெய்கிஷன், முதித் அகர்வால், அலி ஹசன் ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.