சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய மனு: டெல்லி உயர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணை

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
1 min read

மக்களிடையே வெறுப்புணர்வு தூண்டும் வகையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி எம்.பி. ஆகியோர் பேசியதால், அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை (வெள்ளிக்கிழமை) டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

லாயர்ஸ் வாய்ஸ் எனும் அமைப்பு இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், "டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானுல்லா கான், ஏஐஎம்ஐஎம் கட்சி எம்எல்ஏஅக்பரூதின் ஒவைசி, முன்னாள் எம்எல்ஏ வாரிஸ் பதான் ஆகியோர் வெறுப்புணர்வை மக்களிடம் பரப்பும் வகையில் பேசியுள்ளனர்.

வெறுப்புணர்வுடன் பேசியவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, அவர்களை விசாரிக்கத் தனிப்பிரிவு அமைக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர இந்து சேனா அமைப்பு தனியாக இன்று உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. அதில், ''ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாசுதீன் ஓவைசி, அக்பரூதின் ஒவைசி ஆகியோர் வெறுப்புணர்வை மக்களிடம் விதைக்கும் வகையில் பேசுகின்றனர்.

அதேபோல மும்பையைச் சேர்ந்தவரும் ஏஐஎம்ஐஎம் கட்சியைச் சேர்ந்தவருமான வாரிஸ் பதானும் இதே போன்றுதான் வெறுப்புணர்வைத் தூண்டும்வகையில் பேசுகிறார். இவர்களின் பேச்சால் மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டு பல்வேறு உயிர்கள் பலியாகின்றன.

இவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்" எனக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மேலும் வெறுப்புப் பேச்சு தொடர்பாக பல்வேறு மனுக்களும், சில அரசியல் கட்சிகளும் தாக்கல் செய்துள்ளன.

இந்த மனுக்கள் அனைத்தும் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என். பாட்டீல், நீதிபதி சி.ஹரி சங்கர் ஆகியோர் அமர்வு முன் நாளை (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in