

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் பகுதியாக வடக்கு வங்கத்தில் உள்ள 54 தொகுதிகள் அமைந்துள்ளன.
மேற்கு வங்க பேரவையில் உள்ள 294 தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 23, 29-ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி ஆளும் திரிணமூல் காங்கிரஸ், எதிர்க்கட்சியான பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றன.
இந்நிலையில் மேற்கு வங்கத்தில் அடுத்த யார் ஆட்சியைப் பிடிக்கப் போகிறார்கள் என்பதைத் தீர்மானிக்கும் தொகுதிகளாக வடக்கு வங்கத்தில் அமைந்துள்ள 54 தொகுதிகள் அமைந்துள்ளன. வடக்கு வங்கப்பகுதிகளில் அதிக அளவில் தேயிலைத் தோட்டங்கள் அமைந்துள்ளன. டார்ஜிலிங் மலைப்பகுதி, ஜல்பைகுரி, மால்டா, சிலிகுரி, காலிம்போங், கூச்பெஹார் உள்ளிட்ட பகுதிகள் இந்த வடக்கு மண்டலப் பகுதியில் அமைந்துள்ளன.
கடந்த 2011-ல் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ், மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடித்தது. அப்போது மா, மாதி, மானுஷ் (தாய், தாய்நாடு, மக்கள்) என்ற தாரக மந்திரத்தைக் கூறி வாக்குகளை திரிணமூல் காங்கிரஸ் அள்ளியது. இங்குள்ள 54 தொகுதிகளில் 28 தொகுதிகளை அந்தக் கட்சி பெற்றது. 2016-லும் இதே அளவுக்கு தொகுதிகளை இங்கு திரிணமூல் கைப்பற்றியது. அதேநேரத்தில் 2016-ல் பாஜக இங்கு 7 இடங்களைக் கைப்பற்றியது.
2021-ம் ஆண்டு தேர்தலில் 54-ல் 30 தொகுதிகளை திரிணமூல் காங்கிரஸ் கைப்பற்றி 3-வது முறையாக மேற்கு வங்கத்தில் ஆட்சியமைத்தது. அந்த அளவுக்கு முக்கியம் வாய்ந்த தொகுதிகளாக வடக்கு வங்கம் அமைந்துள்ளது. ஆனால் இந்த முறை பாஜகவை சேர்ந்த சில மாவட்ட தலைவர்கள் திரிணமூல் காங்கிரஸுக்குத் தாவியுள்ளதால் அக்கட்சிக்கு இந்த மண்டலத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் திரிணமூல் காங்கிரஸ் அதிக தொகுதிகளைப் பெறும் எனத் தெரிகிறது.
ராஜ்பன்ஷி, காம்டாபுரி இன மக்கள் இங்கு அதிக அளவில் உள்ளனர். அவர்கள் பல ஆண்டுகளாக இந்தத் தொகுதிகளில் செய்ய வேண்டிய வசதிகள், வளர்ச்சி, மக்கள் நலத் திட்டங்கள் தொடர்பாக மக்கள் பிரதிநிதிகளிடம் போராடி வருகின்ரனர். டார்ஜிலிங் பகுதியில், கூர்க்காலாந்து இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் உள்ளனர். இந்தத் தொகுதிகளில் கூர்க்காலாந்து இயக்கத்தைச் சேர்ந்தவர்களுடன் திரிணமூல், பாஜக கட்சிகள் கூட்டணி வைத்து வெற்றி கண்டு வருகின்றன.
திரிணமூல் காங்கிரஸ் தனது சொந்த வேட்பாளர்களை நிறுத்துவதற்குப் பதிலாக, அனித் தாபா தலைமையிலான பாரதிய ஜனமுக்தி மோர்ச்சா கட்சிக்கு 3 இடங்களை ஒதுக்கி, கூட்டணி வியூகத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது. பாஜகவும், மலைப்பகுதிகளில் மாநிலக்கட்சிகளின் கூட்டணியை, தொடர்ந்து நம்பி வருகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலத்திலிருந்து டார்ஜிலிங் மக்களவைத் தொகுதியைத் தக்கவைத்துக் கொள்ள இந்த உத்தி பாஜகவுக்கு உதவி வருகிறது.
திரிணமூல் காங்கிரஸிலிருந்து பலர் பாஜகவுக்கும், பாஜகவிலிருந்து பலர் திரிணமூல் காங்கிரஸுக்கும் தாவியுள்ளனர். இந்தக் கட்சித் தாவல்கள் கூட வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பவையாக உள்ளன என்று அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.