'மன் கி பாத்' கிடையாது 'ஜன் கி பாத்' தான் வெற்றி பெற்றுள்ளது: மோடியை சாடிய உத்தவ் தாக்கரே

'மன் கி பாத்' கிடையாது 'ஜன் கி பாத்' தான் வெற்றி பெற்றுள்ளது: மோடியை சாடிய உத்தவ் தாக்கரே
Updated on
1 min read

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், பாஜகவையும் பிரதமர் மோடியையும் விமர்சித்துள்ளார் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே.

இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் உத்தவ் தாக்கரே 'மன் கி பாத்' கிடையாது 'ஜன் கி பாத்' மட்டுமே வெற்றி பெறும் எனச் சாடியுள்ளார்.

அவர் அளித்த பேட்டியில், "இந்த தேசம் ஜன் கி பாத்-தால் நடத்தப்படும் மன் கி பாத்-தால் அல்ல என்பதை டெல்லி மக்கள் நிரூபித்துள்ளனர். அர்விந்த் கேஜ்ரிவாலை பாஜகவினர் தீவிரவாதி என அழைத்தனர். ஆனால், அவர்களால் அவரைத் தோற்கடிக்க முடியவில்லையே" என விமர்சித்துள்ளார்.
மன் கி பாத் என்பது பிரதமர் நரேந்திர மோடி மனதில் இருந்து என்ற தலைப்பில் வானொலியில் நாட்டு மக்களுடன் பேசும் நிகழ்ச்சி.

ஜன் கி பாத் என்றால் இந்தியில் மக்களின் பேச்சு என்று பொருள். மன் கி பாத், ஜன் கி பாத் என்ற வார்த்தைகளைக் கொண்டு ஜாலம் செய்து விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார் சிவசேனா தலைவரும் மகாராஷ்டிரா முதல்வருமான உத்தவ் தாக்கரே.

முன்னதாக டெல்லி தேர்தல் பிரச்சாரங்களின்போது மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், அர்விந்த் கேஜ்ரிவாலை தீவிரவாதி என விமர்சித்திருந்தார்.

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டம், என்பிஆர் ஆகியனவற்றை எதிர்த்து நடக்கும் போராட்டங்களை கேஜ்ரிவால் ஆதரித்து வருவதால் அவரை தீவிரவாதி என்றே அழைக்க வேண்டும் என்று விமர்சித்திருந்தார். பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று சொல்பவர்களுக்கு பிரியாணி வழங்கிக் கொண்டிருக்கும் கேஜ்ரிவால் ஒரு தீவிரவாதி என்றும் டெல்லி பாஜகவினர் விமர்சித்தனர்.

இந்நிலையில் தான் உத்தவ் தாக்கரேவின் இந்த விமர்சனம் முக்கியத்துவம் பெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in