

ராமஜென்மபூமி அறக்கட்டளை பற்றிய அறிவிப்புக்கும் டெல்லி தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கம் அளித்துள்ளார்.
மக்களவையில் பிரதமர் மோடி பேசுகையில் ‘‘அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான திட்டம் தயாராக இருக்கிறது. உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் கூறியுள்ளபடி, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு 3 மாதங்களில் அறக்கட்டளை அமைக்க உத்தரவிட்டது.
அந்த உத்தரவின்படி ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா எனும் அறக்கட்டளை உருவாக்க மத்திய அமைச்சரவை அனுமதியளித்துள்ளது
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு விரிவான திட்டங்களை மத்திய அமைச்சரவை உருவாக்கியுள்ளது. இதன்படி 67.77 ஏக்கர் நிலம் முழுவதும் அறக்கட்டளை வசம் ஒப்படைக்கப்படும்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி முஸ்லிம்களுக்குத் தேவையான 5 ஏக்கர் நிலம் மசூதி கட்ட சன்னி வக்பு வாரியத்திடம் வழங்கப்படும். இந்த நிலத்தை உத்தரப் பிரதேச அரசு வழங்கும்’’ என்று பிரதமர் மோடி தெரிவித்தார். ஆனால் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு விதிமீறல் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இதனை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
ராமஜென்மபூமி - பாபர் மசூதி வழக்கில் நவம்பர் -9ம் தேதி தீர்ப்பு வழங்கியது. நீண்டகாலம் நிலவி வரும் இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் வகையில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் 3 மாதங்களுக்குள் இதற்காக அறக்கட்டளை அமைக்க வேண்டும் என தனது தீர்ப்பில் தெரிவித்து இருந்தது.
உச்ச நீதிமன்றம் வழங்கிய காலக்கெடு நெருங்குவதால் பிரதமர் மோடி இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டார். நாடாளுமன்றம் நடந்து கொண்டு இருப்பதால் நாடாளுமன்றத்திலேயே அறிவிப்பை வெளியிட்டார். மற்றபடி ராமஜென்மபூமி அறக்கட்டளை பற்றிய அறிவிப்புக்கும் டெல்லி தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தவறவிடாதீர்...