

எப்போதும் நினைவில் இருக்கும் தவறான பண மதிப்பிழப்பு, சிந்திக்காமல் கொண்டுவரப்பட்ட ஜிஎஸ்டி வரி, வங்கிகளுக்கு நெருக்கடி ஆகிய 3 தவறுகள்தான் பொருளாதாரச் சரிவுக்குக் காரணங்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மத்திய அரசைக் குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் உள்ள ஸ்ரீ ராம் வணிகவியல் கல்லூரியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:
''பொருளாதார வளர்ச்சியில் நம்முடைய தேசம் மற்றொரு உற்சாகமில்லாத ஆண்டைத்தான் எதிர்நோக்கி இருக்கிறது. அடுத்துவரும் ஆண்டுகளிலும் நம்முடைய பொருளாதாரத்தில் வளர்ச்சி குறைவாகவும், கடும் சிரமத்தோடுதான் நகரும். சில நேரங்களில் வளர்ச்சி இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம்.
மத்தியக் கிழக்கு நாடுகளில் ஏதேனும் போர் பதற்றம் இருந்தால், அல்லது பிரச்சினை ஏதும் இருந்தால் அல்லது அமெரிக்கா, சீனா இடையே வர்த்தகப் போர் இருந்தால் நம்மிடையே மாற்றுத் திட்டங்கள் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். ஆனால் இப்போது மத்தியில் ஆளும் அரசிடம் மாற்றுத் திட்டம் ஏதும் இருக்கிறதா?
மிகப்பரந்த நோக்கில் இயல்பான பொருளாதார வளர்ச்சி நாட்டில் 10 சதவீதம் இருக்கும் என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால், உண்மையில் இயல்பான, சராசரி வளர்ச்சி என்பது 5 சதவீதம்தான்.
கடந்த 6 காலாண்டுகளாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரிந்து வருகிறது. 7-வது காலாண்டும் குறைவதைத்தான் காட்டுகிறது. அதாவது சரிவு தொடங்கியிருப்பது தெரிகிறது. அதாவது, நாம் செல்லும் பாதையின் இறுதிவரை எந்தவிதமான ஒளியையும் காணவில்லை. இன்னும் நாம் அடர்ந்த, இருள் நிறைந்த குகையில்தான் இருக்கிறோம்.
எதிர்க்கட்சியாக நாங்கள் பொருளாதாரச் சரிவுக்கான காரணங்களைக் கூறுகிறோம், பட்டியலிடுகிறோம். மத்திய அரசு அதற்கான காரணங்களைக் கூற முன்வர வேண்டும். அரசுத் தரப்பில் இருந்து வரும் பல்வேறு துறைகளின் புள்ளிவிவரங்கள் பொருளாதாரம் கடும் சிரமத்தில் இருப்பதைத்தான் காட்டுகின்றன.
எப்போதும் நினைவில் இருக்கும் பண மதிப்பிழப்பு, அவசரகதியில் கொண்டுவரப்பட்ட ஜிஎஸ்டி வரியால் ஏற்பட்ட குழப்பம், வங்கிகளை நெருக்கடியில் தள்ளி கடன் வழங்குவதை நிறுத்துமாறு செய்தது போன்ற தவறுகள்தான் பொருளாதாரச் சரிவுக்குக் காரணங்கள். இந்த 3 பெரும் தவறுகள்தான் பொருளாதாரத்தை அந்தரத்தில் தொங்கவைத்துள்ளது.
சுரங்கம், உற்பத்தித் துறை, தொழில்துறை, மின்சார உற்பத்தி, நிலக்கரி, கச்சா எண்ணெய், எரிவாயு ஆகிய துறைகளின் செயல்பாடுகள் மோசமாக இருக்கின்றன. ஆட்டோமொபைல் துறையில் பின்னடைவு இருப்பது அனைவருக்கும் தெரிகிறது.
நம்முடைய பொருளாதாரத்தில் தற்போது தேவைப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதாவது உற்பத்தி செய்த பொருட்களை வாங்க போதுமான ஆட்கள் இல்லை. இதனால் முதலீடு வருவது தடுக்கப்பட்டு, பொருளாதாரம் இன்னும் சுருங்கும். இதைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிக் குறைப்பு செய்ததற்குப் பதிலாக, நிதியமைச்சர் ஜிஎஸ்டி வரியைக் குறைத்து, மக்களின் கைகளில் அதிகமான பணத்தைப் புழங்க வழி செய்திருக்கலாம். இதன் மக்கள் அதிகமாக முதலீடு செய்வார்கள்.
மக்கள் கைகளில் பணம் புழங்குவதற்கு 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம், பிரதமர் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் பணத்தை மக்களுக்கு வழங்க வேண்டும். அப்போதுதான் மக்கள் பணத்தைச் செலவு செய்வார்கள். ஆனால்,அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் இந்தத் துறைகளுக்குமான நிதியை மத்திய அரசு குறைத்துள்ளது. பொருளாதாரத்தைச் சீரமைக்கவும், வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லும் வாய்ப்பை அரசு தவறவிட்டது''.
இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.