Published : 20 Jan 2020 16:11 pm

Updated : 20 Jan 2020 16:20 pm

 

Published : 20 Jan 2020 04:11 PM
Last Updated : 20 Jan 2020 04:20 PM

பேரணி செல்வதில் தாமதம்: வேட்புமனு தாக்கல் செய்ய முடியாமல் திரும்பிய கேஜ்ரிவால்

arvind-kejriwal-to-file-his-nomination-on-tuesday

புதுடெல்லி

டெல்லி தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்ய சென்ற முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பேரணியாக சென்றபோது காலதாமதமானதால் வேட்புமனுவை தாக்கல் செய்ய முடியாமல் திரும்பினார்.

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி மாதம் 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய அரசை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தேதி: பிப்ரவரி 8-ம் தேதி டெல்லி சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11-ம் தேதி நடைபெறுகிறது. பல்வேறு கட்சிகளும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

ஆம் ஆத்மி சார்பில் முதல்வர் கேஜ்ரிவால் மீண்டும் புதுடெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்வதாக அறிவித்து இருந்தார்.

அதன்படி, இன்று அவர் தனது வீட்டில் தாய், தந்தையரிடம் ஆசி பெற்று விட்டு கட்சி நிர்வாகிகள், சக அமைச்சர்கள் புடை சூழல திறந்த வாகனத்தில் வாக்கு சேகரித்தவாறே வேட்புமனுத் தாக்கல் செய்ய புறப்பட்டார்.

செல்லும் வழியில் கட்சித் தொண்டர்கள், மக்கள் திரண்டதால் அவர்களிடம் வாக்கு சேகரித்தவாறே கேஜ்ரிவால் சென்றார். பல இடங்களில் சென்றதால் அவர் வேட்புமனு தாக்கல் செய்யும் இடத்தை சென்றடைய தாமதமானது.

மாலை 3 மணிவரை மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியும். ஆனால் கேஜ்ரிவால் அங்கு வந்து சேர 3 மணிக்கு மேலாகி விட்டது. இதனால் தேர்தல் அதிகாரி அங்கிருந்து சென்று விட்டார். காலதாமதமாகி விட்டதால் நாளையே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னர் இதுகுறித்து கேஜ்ரிவால் கூறுகையில் ‘‘மக்களை சந்தித்து விட்டு வருவதற்கு காலதாமதமாகி விட்டது. எனக்கு மக்கள் தான் முக்கியம். காலதாமதத்தை பற்றி நான் கவலைப்படவில்லை. நாளை வந்து வேட்புமனு தாக்கல் செய்வேன்’’ எனக் கூறினார்.


Arvind Kejriwalகேஜ்ரிவால்வேட்புமனுடெல்லிபுதுடெல்லி தொகுதி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like


More From This Category

More From this Author