

உன்னாவ் பலாத்கார வழக்கில் வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ குல்தீப் செங்கார், தனது தண்டனையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
குல்தீப் செங்காரின் மேல்முறையீட்டு மனுவை ஏற்று சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்பவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
உத்தரப் பிரதேச மாநிலம் பங்கார்மாவு தொகுதி பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார். கடந்த 2017-ம் ஆண்டு உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இதில் குல்தீப் சிங் செங்கார் மீது பாதிக்கப்பட்ட சிறுமி புகார் செய்தார்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட எம்எல்ஏ குல்தீப் செங்கார் மீது ஐபிசி 120 பி பிரிவு (குற்றச்சதி), 363 (ஆள் கடத்தல்), 366 (திருமணத்துக்குப் பெண்ணைக் கட்டாயப்படுத்துதல்), 376 (பலாத்காரம்), போக்ஸோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டு, டெல்லி திஸ் ஹசாரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்து கடந்த ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. குல்தீப் செங்கார் தனது ஆயுள் முழுவதையும், சிறையில் கழிக்க வேண்டும் என்றும், ரூ.25 லட்சம் இழப்பீட்டைப் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில், தனக்கு வழங்கப்பட்ட வாழ்நாள் சிறைத் தண்டனையை எதிர்த்து குல்தீப் செங்கார் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் மன்மோகன், சங்கீதா திங்ரா ஷேகல் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது குல்தீப் செங்கார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், " வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் ரூ.25 லட்சத்தை ஜனவரி 20-ம் தேதிக்குள் டெபாசிட் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஆனால், அந்த அளவுக்குப் பணம் குல்தீப்பிடம் இல்லை. குல்தீப் செங்காருக்கு தற்போது திருமண வயதில் இரு மகள்கள் இருப்பதால், உடனடியாக அந்தப் பணத்தை வழங்கிட முடியாது. அவகாசம் வழங்கிட வேண்டும். குல்தீப் குடும்பத்தில் அவர் ஒருவர் மட்டுமே சம்பாதிக்கும் நபராக இருக்கிறார்" எனக் கோரினார்.
அவகாசம் வழங்கிய நீதிபதிகள் கூறுகையில், " குல்தீப் செங்காருக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பில் ரூ.25 லட்சம் அபராதத்தில் உடனடியாக ரூ.10 லட்சத்தைப் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இன்னும் 60 நாட்களில் எவ்விதமான நிபந்தனையும் இன்றி வழங்க வேண்டும். மீதமுள்ள ரூ.15 லட்சத்தை விசாரணை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யலாம்" எனத் தெரிவித்தனர்.
மேலும், குல்தீப் செங்கார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்று சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்பவும், பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில் பதில் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதுமட்டுமல்லாமல் குல்தீப் செங்காரின் மனுக்களின் நகல்களைப் பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பு வழக்கறிஞருக்கு வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.