

குழந்தையும் தெய்வமும் ஒன்று. குழந்தைகளை விரும்பாதவர்கள் உலகில் யாருமில்லை. அதிலும் இந்தியாவில் பெண் குழந்தைகள் என்றாலே லட்சுமி தேவிக்கு இணையாகக் கொண்டாடப்படுகிறார்கள். அது உண்மை என்பது நிரூபிக்கும் விதமாக இந்த இளைஞர் செய்த செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தான் புதிதாக வாங்கிய காரை கோயிலுக்குக் கொண்டு சென்று ஆசி பெறுவதற்குப் பதிலாகத் தனது 2 வயது குழந்தையின் பாதங்களை காரில் வைத்து ஆசி பெற்றது அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது
குறிப்பாக மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான அசோக் சவான் இந்த வீடியோ ட்விட்டரில் பகிர்ந்து பாராட்டியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் கோல்காபூரைச் சேர்ந்தவர் நாகேஷ் பாட்டீல். தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக இருக்கும் நாகேஷ் பாட்டீலுக்கு இரு மகள்கள் உண்டு.
கடந்த இரு நாட்களுக்கு முன் புதிதாக கார் ஒன்றை நாகேஷ் பாட்டீல் வாங்கி இருந்தார். அந்த வாகனத்துக்கு மாலை அணிவித்து வீட்டுக்கு எடுத்துவந்த நாகேஷ் பாட்டில் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தும் முன் செய்த செயல்தான் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
காரை வீட்டுக்குக் கொண்டுவந்த நாகேஷ், தனது 2 வயது மகளைத் தூக்கி குங்குமத்தைக் கலக்கி வைத்திருந்த தட்டில் குழந்தையின் பாதத்தை நனையுமாறு செய்தார். அந்த குழந்தையின் பாதத்தை காரின் முன் பகுதியில் வைத்து ஆசி வழங்குமாறு செய்தார்.
இது தொடர்பான வீடியோவை சிலர் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்தனர். நாகேஷ் பாட்டீலின் செயலை சமூக ஊடகங்களில் பார்த்த நெட்டிசன்கள், அனைவரும் பாராட்டி, புகழ்ந்து வருகின்றனர்.