

உத்தரபிரதேசத்தில் போராட்டக்காரர்களின் துப்பாக்கி குண்டை தடுத்து போலீஸ் அதிகாரியின் உயிரை அவர் வைத்திருந்த ‘பர்ஸ்' காப்பாற்றியுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து உத்தரபிரதேசத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் போராட்டக்காரர்கள் கள்ளத்துப்பாக்கிகளை பயன்படுத்தி போலீஸார் மீது தாக்குதல் நடத்துகின்றனர். போராட்ட களங்களில் இதுவரை 405 கள்ளத்துப்பாக்கி குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
உத்தரபிரதேசத்தின் பெரோஷோபாத்தில் கடந்த 21-ம் தேதி குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது. அப்போது போலீஸ்காரர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
போராட்டக்காரர்கள், போலீஸாரை குறிவைத்து கள்ளத்துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர். இதில் விஜய குமார் என்ற போலீஸ் அதிகாரி மீது குண்டு பாய்ந்தது. அவர் சட்டைப்பையில் வைத்திருந்த பர்ஸால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, "பெரோஷாபாத்தின் நல்பண்ட் பகுதியில் வன்முறையைக் கட்டுப்படுத்த முயன்றோம். அப்போது போராட்டக்காரர்கள் கள்ளத் துப்பாக்கிகளால் சுட்டனர். இதில் ஒரு குண்டு எனது கவச உடையைத் துளைத்து சட்டைப்பையில் இருந்த பர்சில் ஆழமாகப் பதிந்தது. அந்த பர்ஸ் மட்டும் இல்லையென்றால் துப்பாக்கி குண்டு எனது உடலைத் துளைத்திருக்கும். எனது பர்ஸில் 4 ஏடிஎம் கார்டுகள், சிவன், சாய் பாபாவின் படங்களை வைத்திருந்தேன். இப்போது நான் மறுபிறவி எடுத்திருக்கிறேன்" என்று தெரிவித்தார்.