

ஆர்.ஷபிமுன்னா
பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் 18 ஆண்டுகளாக தமிழ் பேராசிரியருக்கான பணி காலியாக உள்ளது. இதில் மத்திய அரசு தலையிட்டு உதவ வேண்டும் என மக்களவையில் முஸ்லிம் லீக் எம்.பி.யான கே.நவாஸ்கனி வலியுறுத்தியுள்ளார்.
மக்களவையில் நேற்று முன்தினம் பூஜ்ஜிய நேரத்தில் ராமநாதபுரம் எம்.பி.யான கே.நவாஸ்கனி பேசியதாவது: யூனியன் பிரதேசமான சண்டிகரில் பழம்பெருமை வாய்ந்த பஞ்சாப் பல்கலைக்கழகம் செயல்படுகிறது. இது பஞ்சாப், ஹரியாணா மற்றும் மத்திய அரசின் நிதியால் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 1966-ம் ஆண்டு தென்னிந்திய மொழிகள் துறை தொடங்கப்பட்டது.
இதன் நோக்கம் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியவற்றை மாணவர்களுக்கு போதிப்பது ஆகும். எனினும், இதில் தமிழுக்காக மட்டும் நிரந்தரப் பணியில் ஓர் உதவிப்பேராசிரியர் 1967-ல் அமர்த்தப்பட்டிருந்தார். மற்ற மொழிகளுக்கு தற்காலிகப் பணியில் சிலர் அமர்த்தப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வந்தன.
கடந்த 2001 ஆம் ஆண்டு தமிழுக்கானப் பேராசிரியர் முனைவர் கு.ராமகிருட்டிணன் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அப்போது முதல் அப்பணியில் எவரும் அமர்த்தப்படாமல் 18ஆண்டுகளாக காலியாக உள்ளது. மற்ற மொழிகளுக்கான வகுப்புகளும் முறையாக நடத்தப்படுவதில்லை.
தமிழக அரசு நிதி
தமிழக முதல்வர் பழனிசாமி, சட்டப்பேரவையின் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதில் அவர், பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரியர் பணியமர்த்த தமிழக அரசு நிதி அளித்து உதவும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்காக, தமிழக அரசு பஞ்சாப் பல்கலைக்கழகத்துக்கு கடிதங்களும் எழுதியுள்ளது. எனவே, பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் தமிழ் பாடங்களை மீண்டும் போதிக்க மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை தலையிட்டு தீர்வு காண வலியுறுத்துகிறேன். இதன்மூலம், செம்மொழியான தமிழ் மொழி வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவ வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.
இத்துடன் தென்னிந்தியாவின் மற்ற மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவற்றையும் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் போதிக்க மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை தலையிட்டு தீர்வு காண வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
‘இந்து தமிழ் திசை’ செய்தி எதிரொலி
மக்களவையில் எழுப்பப்பட்ட இப்பிரச்சினை ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியான செய்தியின் தாக்கமாக அமைந்துள்ளது. பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் ஓய்வுபெற்ற முனைவர்.கு.ராமகிருட்டிணன் பேட்டியை இந்து தமிழ் திசை நாளிதழ் வெளியிட்டிருந்தது.
இதையடுத்து, பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் தமிழ் பேராசிரியர் பணிக்கான ரூ.12 லட்சம் செலவை ஆண்டு தோறும் ஏற்கும் என தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். இது குறித்து தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பஞ்சாப் பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் கரம்ஜித் சிங்கிற்கு கடிதம் எழுதியும் இதுவரை பலனில்லை.