

ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசை காரணமாக 11 பெண் குழந்தைகளைப் பெற்ற ஒரு பெண், 12-வதாக ஒரு ஆண் குழந்தையைப் பெற்றுள்ளார்.
இந்தியாவில் ஆண் குழந்தை மீதான மோகம் அதிகமாக உள்ளது. இதனால் சில தம்பதிகள் ஆண் குழந்தை பிறக்கும் வரையில் குழந்தை பெறுவதை நிறுத்துவதே இல்லை. இதுபோன்ற காரணத்தால் லட்சக் கணக்கான பெண் குழந்தைகள் பிறந்துள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், சுரு மாவட்டம், ஜாத்சர் நகரைச் சேர்ந்த கதி (42) என்ற பெண்ணும் அவரது கணவரும் ஆண் குழந்தை வேண்டும் என்ற முடிவில் தீர்மானமாக இருந்துள்ளனர். இதனால் அவர் தொடர்ந்து 11 பெண் குழந்தைகளை பெற்றுள்ளார். ஆண் குழந்தையை பெற்றெடுக்காததால் அவருடைய உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும் அவரை ஏளனம் செய்துள்ளனர். இந்நிலையில், ஒரு வழியாக அவருக்கு கடந்த 20-ம் தேதி 12-வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதில் முதல் மகளுக்கு 22 வயதாகிறது. 2 மகள்களுக்கு இதுவரை திருமணம் முடிந்துள்ளது.
இது ஒன்றும் முதல் முறை அல்ல. ஏற்கெனவே மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த லட்சுமி, 10 பெண் குழந்தைகளைப் பெற்றார். இவர் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11-வதாக ஆண் குழந்தையைப் பெற்றார். இதுபோல கர்நாடகாவைச் சேர்ந்த பாக்யம்மா என்ற மற்றொரு பெண்ணும் 12-வதாக ஆண் குழந்தையைப் பெற்றுள்ளார்.