அயோத்தி தீர்ப்பு; மக்கள் முதிர்ச்சியோடு நடந்துகொண்டனர்: பிரதமர் மோடி

பிரதமர் மோடி | பிரதிநிதித்துவப் படம்
பிரதமர் மோடி | பிரதிநிதித்துவப் படம்
Updated on
2 min read

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கிய பின்னர் நமது மக்கள் காட்டிய பொறுமை, கட்டுப்பாடு மற்றும் முதிர்ச்சி ஆகியவை தேசிய நலனை விடஇந்தியர்களுக்கு பெரியது வேறெதுவுமில்லை என்பதை நிரூபிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழையும் மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அவரது கடந்த ஆட்சியைப் போல இந்த ஆட்சியிலும் மன் கி பாத் உரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இன்று தனது மாதாந்திர ஒலிபரப்பில் நாட்டு மக்களை உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ''வரலாற்றுத் தீர்ப்பின் பின்னர், நாடு ஒரு புதிய பாதையில், ஒரு புதிய தீர்மானத்துடன் முன்னேறியுள்ளது'' என்றும் அவர் கூறினார்.

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று கூறியதாவது:

''அயோத்தி தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்பது புதிய நம்பிக்கைகள் மற்றும் அபிலாஷைகள் நிறைந்த ஒரு தீர்வு ஆகும்.

இந்த தீர்ப்பு நமக்கு புதிய இந்தியா என்ற உணர்வைத் தூண்டுகிறது. மேலும், அமைதி, ஒற்றுமை மற்றும் நல்லெண்ண மனப்பான்மையுடன் முன்னேற வேண்டும் என்பது எனது நம்பிக்கையும் விருப்பமும் ஆகும்,

ஒரு நூற்றாண்டுக்கும் மேலான ஒரு சிக்கலான பிரச்சினைக்கு தீர்வு கண்ட உச்சநீதிமன்றம், நவம்பர் 9- ம் தேதி தனது வரலாற்றுத் தீர்ப்பில் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ஒரு அறக்கட்டளையால் ராம் கோயில் கட்டுவதை ஆதரித்தது, மேலும் புனித நகரத்தில் மசூதிக் கட்ட மாற்றுநிலமாக ஐந்து ஏக்கர் நிலப்பரப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதற்குமுன் நான் ஆற்றிய தீபாவளி குறித்த எனது மான் கி பாத் உரையில், அயோத்தி பிரச்சினை தொடர்பாக 2010 அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அப்போது அரசாங்கமும், சிவில் சமூகமும், மக்களும் எவ்வாறு அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணி வந்தார்கள் என்பதையும் நினைவுகூர்ந்தேன்.

இந்த முறையும், நவம்பர் 9ஆம் தேதி உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவித்தபோது, ​தேசிய நலனே தங்களுக்க மிக உயர்ந்தது என்பதை ​130 கோடி இந்தியர்கள் மீண்டும் நிரூபித்துள்ளனர். அமைதி, ஒற்றுமை மற்றும் நல்லெண்ணத்தின் மதிப்புகள் நம் நாட்டில் மிக முக்கியமானவை.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு விரிந்த கரங்களுடன் திறந்த மனதுடன் ஆரத்தழுவி ஏற்றுக்கொள்ளப்பட்டது. நமது மக்கள் தீர்ப்பை எளிதாகவும் அமைதியுடனும் ஏற்றுக்கொண்டார்கள். அவர்கள் காட்டிய பொறுமை, கட்டுப்பாடு மற்றும் முதிர்ச்சிக்கு நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

ஒருபுறம், நீடித்த சட்டப் போர் முடிவுக்கு வந்துவிட்டது, மறுபுறம், நீதித்துறை மீதான மரியாதை நாட்டில் வளர்ந்துள்ளது. உண்மையான அர்த்தத்தில், இந்த தீர்ப்பு நம் நாட்டில் நீதித்துறைக்கு ஒரு மைல்கல்லாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பு வழங்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, மக்கள் காட்டிய முதிர்ச்சிக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.''

இவ்வாறு இன்றைய மன் கி பாத் வானொலி உரையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in