

கொல்கத்தா,
உச்சநீதிமன்றமே மத்திய அரசுக்கு நற்சான்றிதழ் கொடுத்துள்ளதால் ரஃபேல் ஒப்பந்தம் குறித்து பொய்யாக பேசிவந்த ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று யுவ மோர்ச்சா கொல்கத்தாவில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
உச்ச நீதிமன்றம் கடந்த வியாழன் அன்று ரஃபேல் வழக்கில் சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது. மேலும் ரஃபேல் ஊழல் வழக்கில் பிரதமர் மோடியை ''காவலாளியே திருடன்'' என்று ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியதாக பாஜக எம்பி மீனாட்சி லெக்வி அவமதிப்பு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கவனமுடன் பேச வேண்டும் என எச்சரித்தது.
''உச்ச நீதிமன்றம் ரஃபேல் வழக்கில் ஊழல் ஏதுமில்லை'' என்று தீர்ப்பு வந்த பின்பு இவ்வழக்கு முடிவுக்கு வந்தது. எனினும் இவ்வழக்கு குறித்து முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை பாஜகவினர் மத்தியில் பரவலாக எழுந்து வருகிறது.
ராகுலுக்கு எதிராக இப்பிரச்சினையில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பாஜக யுவ மோர்ச்சா இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
பாஜகவின் வடக்கு கொல்கத்தா யுவ மோர்ச்சா உறுப்பினர் ஆர்ப்பாட்டம் குறித்து கூறுகையில், ''ராகுல் காந்தி எப்பொழுதும் பிரதமர் மோடியையே குறி வைக்கிறார். இப்பொழுது நீதிமன்றமே பிரதமர் மோடிக்கு நற்சான்றிதழை வழங்கிவிட்டது. எனவே ராகுல் காந்தி பிரதமரிடம் மன்னிக் கேட்க வேண்டும். ரஃபேல் ஒப்பந்தம் குறித்து தொடர்ந்து ராகுல் பொய் சொல்லி வருகிறார்'' என்றார்.
''ராகுல் காந்தி மக்களை ஏமாற்றி வருகிறார். மேலும் ரபேல் பிரச்சினையில் பொய்யான தகவல்களை பரப்பிவருகிறார். அதனால்தான் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளோம்.'' என்று இன்னொரு ஆர்ப்பாட்டக்காரர் தெரிவித்தார்.
இதற்கிடையில், பிரான்சின் டசால்ட் உடனான ரஃபேல் போர் விமானம் ஒப்பந்தம் தொடர்பாக கூட்டு நாடாளுமன்றக் குழு விசாரணை நடத்தப்பட வேண்டுமென ராகுல் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.