4 நீதிபதிகளுடன் இரவு விருந்துக்குச் செல்லும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் : கோப்புப்படம்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் : கோப்புப்படம்
Updated on
2 min read

புதுடெல்லி

அயோத்தி நில விவகார வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், மற்ற 4 நீதிபதிகளுடன் இன்று இரவு விருந்துக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை நிர்மோகி அகாரா, ராம் லல்லா, சன்னி வக்பு வாரியம் ஆகியோர் உரிமை கொண்டாடினார்கள். இதை சரிபாதியாகப் பிரித்துக் கொள்ள கடந்த 2010-ம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட 14 மேல் முறையீட்டு மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் தொடர்ந்து 40 நாட்கள் விசாரணை நடத்தி முடித்தது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் 17-ம் தேதி ஓய்வு பெறுவதையடுத்து, அயோத்தி வழக்கில் இன்று 1,045 பக்கங்களில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

சர்ச்சைக்குரிய 2.77 நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்றும், முஸ்லிம் சமூகத்தினருக்கு அயோத்தியில் மசூதி எழுப்ப 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தனர்.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு ஒரே தீர்ப்பை வழங்கியது.

வழக்கமாக அரசியல் சாசன அமர்வில் இடம் பெறும் நீதிபதிகளிடையே வெவ்வேறு தீர்ப்புகள் வரும் நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் நீதிபதிகள் கலந்து ஆலோசித்து ஒரே தீர்ப்பை வழங்கினார்கள்.

நூற்றாண்டுகளாக நீடித்து வந்த, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் இன்று தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து, உடன் அமர்வில் இருந்த எஸ்.ஏ.போப்டே, அசோக்பூஷண், டிஒய் சந்திரசூட், எஸ்ஏ.நசீர் ஆகிய 4 நீதிபதிகளுடன் இன்று இரவு விருந்துக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளார்.

டெல்லியில் உள்ள தாஜ் மான்சிங் நட்சத்திர ஹோட்டலில் தலைமை நீதிபதி கோகோய் 4 நீதிபதிகளுடன் விருந்து சாப்பிடுகிறார். தொடர்ந்து 40 நாட்கள் விசாரணை, தீர்ப்பு எழுதியது உள்ளிட்ட நெருக்கடியான, அழுத்தமான சூழலில் இருந்துவிடுபட்டு இந்த விருந்தில் நீதிபதிகள் பங்கேற்கின்றனர்.

ஐஏஎன்எஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in