அயோத்தி தீர்ப்பை மறு சீராய்வு செய்ய வலியுறுத்துவோம்: சன்னி வக்போர்டு

அயோத்தி தீர்ப்பை மறு சீராய்வு செய்ய வலியுறுத்துவோம்: சன்னி வக்போர்டு
Updated on
1 min read

புதுடெல்லி

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மதிக்கிறோம். எனினும் தீர்ப்பில் திருப்தியில்லை என அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகள் உரிமை கோரி வருகின்றன. இந்த வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரித்தது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாடா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கடந்த 2010 செப்டம்பர் 30-ம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை இன்று வழங்கியது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம், அதற்கான அமைப்பை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு உருவாக்க வேண்டும், அதற்கு பதில் இஸ்லாமியர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை மத்திய அரசும், உத்தரப் பிரதேச அரசும் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பு குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அயோத்தி வழக்கில் சன்னி வக்போர்டு சார்பில் ஆஜரான வழக்கறிஞரும், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் நிர்வாகி சப்ரயப் ஜிலானி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மதிக்கிறோம். எனினும் தீர்ப்பில் திருப்தியில்லை. தீர்ப்பைக் காரணமாக வைத்து யாரும் ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் ஈடுபடக்கூடாது. இதில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. இந்த விஷயத்தில் சடட விஷயங்களை நாங்கள் ஆராய்வோம். இந்த தீர்ப்பில் எங்களுக்கு முழுமையான திருப்தி ஏற்படவில்லை. மறு சீராய்வு செய்ய கோரிக்கை விடுப்போம்’’ எனக் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in