பிரசாதத்தில் சயனைடு கலந்து கொடுத்து 20 மாதங்களில் 10 கொலைகள்: ஆந்திர ரியல் எஸ்டேட் வர்த்தகர் ‘சயனைடு சிவா’ கைது

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

ஏலூரு

கோயில் பிரசாதத்தில் சயனைடு கலந்து கொடுத்து 10 பேரை கொலை செய்த ரியல் எஸ்டேட் வர்த்தகரை ஆந்திரா போலீஸார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து மேற்கு கோதாவரி மாவட்ட எஸ்பி நவ்தீப் சிங் கூறியதாவது:மேற்கு கோதாவரி மாவட்டம், ஏலூரு பகுதியில் உள்ள என்.டி.ஆர் காலனியை சேர்ந்த எல்லங்கி சிம்மாத்ரி என்கிற சிவா ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தவர். இவருக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால், மிக குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்க முடிவு செய்தார். இதனால் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசைப்படும் நபர்களை சிவா தேர்ந்தெடுத்தார்.

பின்னர் அவர்களிடம் பணம், நகைகளை இரட்டிப்பாக்கி கொடுப்பது, புதையலை எடுத்து கொடுப்பது, மண்ணுளி பாம்பு, 2 புறமும் தலையிருக்கும் பாம்பு, நவரத்தின கற்கள் என அவரவர் நம்பும்படியாக பேசி அவர்களிடம் இருந்து பணம், நகைகளை வாங்கிகொண்டு ஏமாற்றுதல் போன்றவற்றை சிவா செய்து வந்தார். மேலும் அவர்களுக்கு கோயில் பிரசாதம் கொடுப்பதாக கூறி, அதில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்வதையும் தொழிலாக கொண்டிருந்தார்.

இதுவரை சயனைடு சிவா, கிருஷ்ணாமற்றும் கோதாவரி மாவட்டங்களில் மட்டும், கடந்த 20 மாதங்களில் 10 பேரை கொலை செய்துள்ளார். இறுதியாக கடந்த மாதம் 16-ம் தேதி, நாகராஜு எனும் உடற்பயிற்சி ஆசிரியரை ஏமாற்றி சயனைடு பிரசாதம் கொடுத்து கொலை செய்தார். நாகராஜுவின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தினார்கள்.

அதில் சயனைடு கொடுத்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. ஆதலால் கொலையாளியை கைது செய்தோம். சயனைடு சிவாவை கைது செய்ய தாமதமாகி இருந்தால் அவர் மேலும் 10 பேரை கொலை செய்திருப்பார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in