

சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேவுக்கு நேற்று முன்தினம் வந்த கொலை மிரட்டலை தொடர்ந்து, அவருக்கு வழங்கப் படும் பாதுகாப்பை மகாராஷ்டிர அரசு ‘இசட் பிளஸ்’ ஆக அதிகரித் துள்ளது. இதற்கு அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று ஒப்புதல் அளித்தார்.
இதுகுறித்து மாநில உள்துறை இணை அமைச்சர் ராம் ஷிண்டே நேற்று கூறும்போது, “அண்ணா ஹசாரேவுக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. அவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பை அவ்வப்போது ஆய்வுசெய்வது வழக்கம். தற்போது அவருக்கு கொலை மிரட்டல் வந்துள்ள நிலையில், அவரது வழிக்காவல் பிரிவிலும் அவரது வீடு மற்றும் அலுவலகத்துக்கும் பாதுகாப்பை அதிகரித்துள்ளோம். அவரது பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும்” என்றார்.
ஹசாரேவுக்கு நேற்று முன்தினம், மகாராஷ்டிர மாநிலம், லட்டூர் மாவட்டத்தில் இருந்து ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. இதில் 2 ஆண்டுகளுக்கு முன் புனேவில் கொல்லப்பட்ட நரேந்திர தாபோல்கருக்கு ஏற்பட்ட கதிதான் ஹசாரேவுக்கும் ஏற்படும் என கூறப்பட்டிருந்தது. இக்கடிதம் தொடர்பாக அகமதுநகரின் பார்னர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுபோல் ஹசாரேவுக்கு சுமார் 15 நாட்களுக்கு முன் வந்த கடிதத்தில் “டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுடன் தொடர்பை துண்டித்துக் கொள்ளாவிடில் நீங்கள் (ஹசாரே) கொல்லப்படுவது உறுதி” என்று கூறப்பட்டிருந்தது.
இந்தக் கடிதங்கள் குறித்து ஹசாரே கூறும்போது, “இந்த மிரட்டல்களுக்கு நான் பயப்பட மாட்டேன். எனது பணிகளை தொடர்ந்து செய்வேன்” என்றார்.